கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேரும் போட்டி போட்டு எனக்கு இம்சை கொடுக்கிறார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய விஜயகாந்த் மேலும் தெரிவித்ததாவது,

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். தர்மம் தான் நான். விஜயகாந்த் வந்தான், மக்களுக்காக வாழ்ந்தான் என்று சரித்திரம் பேச வேண்டும். அதற்காக தான் நான் வந்து இருக்கிறேன். இன்னும் பலர் விஜயகாந்த் ஏன் வருகிறார்? எதற்கு வருகிறார்? வந்து விடுவாரா? என்றெல்லாம் நினைக்கிறார்கள்.

இரண்டு பேர் தான் மாறி, மாறி கொள்ளை அடிக்க வேண்டுமா? புதிய கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா? அனுபவசாலிகள் வேண்டுமாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நான் செய்வேன். வெளிப்படையான அரசு தான் எனக்கு தெரியும். முல்லைப்பெரியாறு அணைக்காக நானும் போராடி இருக்கிறேன். தேனியில் உண்ணாவிரதம் இருந்தேன். இந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது நாங்கள் தான் என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூறுகிறார்கள். நான் சுருக்கமாக முடிவு சொல்லட்டுமா. நானே முதலமைச்சராக இருந்தாலும், யார் முதலமைச்சராக இருந்தாலும் நீதமன்றம் என்ன முடிவு சொல்கிறதோ அதன்படி தான் நடக்க வேண்டும்.

நான் இங்கு அதிக நேரம் பேச முடியாது. ஏனெனில் கடந்த தேர்தலின் போது நான் 10 நிமிடம் அதிகமாக பேசிவிட்டேன் என்பதற்காக கருணாநிதி என்னை நீதிமன்றத்துக்கு அலைய வைத்தார். இரண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு எனக்கு இம்சைகள் கொடுக்கிறார்கள்.

கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிரி. ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எதிரி. இரண்டு பேருக்கும் நான் தான் எதிரி. ஸ்டாலின் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு அவரே எதிரி என்றார்.