அரசாங்கத்தின் நம்பிக்கையீனப் போக்குகளின் மீதான வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வெறுப்புத் தன்மையையும் அவர்களது மனதளவிலான உளைச்சல்களையும்  பிரதிபலித்து நிற்பதாகவே யாழ் மாணவன் செந்தூரனின் முடிவு சுட்டி நிற்கின்றது. இந்த செயற்பாட்டின் பிற்புலங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். இதனை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே செந்தூரனின் முடிவு தொட்டுக்காட்டியுள்ள விடயம் சம்பந்தமாக தாமதமில்லாத முடிவொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். 


வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் எண்ணங்களை வெளிக்காட்டிவிட்டுச் சென்றுள்ள செந்தூரனின் தாயார், தந்தையார் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எமது மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம் பெற்ற 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
சம்பந்தன் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


  நானோ எனது கட்சியோ இன்றைய அரசாங்கத்தின் பங்காளிகளாக இல்லாத போதிலும் நல்லாட்சி மலர்வதற்கு ஏதுவான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். அந்த வகையில் நாம் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கின்றோம். இந்த மாற்றத்தை அங்கீகரித்தும் வருகின்றோம். அதன் அடிப்படையிலே நாம் நமது எதிர்பார்ப்புக்களை வெளியிட்டு வருகின்றோம். அமையப் பெற்றுள்ள நல்லாட்சி அரசாங்கம் ஊழல் மோசடிகளை வெறுக்கின்றது. உண்மையில் மலிந்து கிடக்கின்ற ஊழல் மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக இருக்கின்றோம். 


எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து  இங்கு கூறுவோமானால் எமது நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சி கண்டிருக்கின்ற அதேநேரம் இறக்குமதியானது அதிகரித்தே காணப்படுகின்றது. ஏற்றுமதித்துறையானது இங்கு வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. 


குறிப்பிட்டுக் கூறுவதாயின் எமது நாட்டின் தேயிலையானது ஏற்றுமதித்தரம் வாய்ந்த சிறப்பு உற்பத்தியாகும். எனினும் தேயிலையின் உற்பத்தியும் அதன் ஏற்றுமதியும் இன்று வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் அங்கு முகாமைத்துவம் என்பது முறையற்று காணப்படுகிறது. இந்நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 


எமது நாட்டின் ஏற்றுமதித்துறையை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை ஒன்றை முன்வைக்கின்றேன். வெளிநாடுகளின் சந்தை வாய்ப்புக்களை  பெற்றுக் கொள்வதற்கு தூதுவராலயங்களின் பங்களிப்பு அவசியம் எனக் கூறிக்கொள்கிறேன். 
அண்டைநாடான இந்தியாவுடன் நாம் வரலாற்று உறவினைப் பேணிவருகின்றதன் அடிப்படையில் அங்கு எமது சந்தை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்வதற்கு முற்பட வேண்டும். 


இதேவேளை யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.  

அந்த மக்களின் வாழ்வாதாரம் வருமானம் தொழில் நிலை என அனைத்தும் பாரிய பாதிப்புக்களைச் சந்திக்கின்றன. பாரதூரமான பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்துள்ள வடக்கு,-கிழக்கு மக்களின்பால் மஹிந்த  ராஜபக் ஷ அரசாங்கமானது தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்தது. மக்களின் நிலைமைகளை மாற்றியமைப்பதற்கு முன்னைய அரசாங்கம் முற்பட்டிருக்கவில்லை.


தற்போதை நல்லாட்சிக்கான அரசாங்கத்தின்  போக்கு அவ்வாறு இல்லை என்கின்ற போதிலும் எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை.


ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி செயற்பட்டு வருகின்ற வடக்கு, கிழக்கைச் சேர்ந்த எமது தமிழ் மக்கள் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதையே விரும்புகின்றனர். இதனையே ஒவ்வொரு தேர்தல்களின் போதும் வெளிபடுத்தி வருகின்றனர்.


எனினும் எமது மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்களும் செயற்பாடுகளும் போதுமானதல்ல என்பதைக் காணவேண்டும்.


தசாப்த காலங்களாக இருந்துவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுதல் வேண்டும். எமது மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினைச் செய்வதற்கு காத்திருக்கின்றனர்.எனவே மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, வருமான வழிகள் ஆகியவற்றில் இருந்து வருகின்ற பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகள் காணப்படுதல் அவசியமாகின்றது.


நாட்டின் ஏனைய பகுதிகளைச் சார்ந்த மக்களை விட வடக்கு கிழக்கு மக்களே அதிகமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களே அதிகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுடன் வடக்கு, கிழக்கு தொடர்பில் அரசாங்கத்திடம் விஷேட திட்டமும் இருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் அரசாங்கம் அவசரமாக செயற்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.


இதே வேளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செந்தூரன் என்ற மாணவன் நேற்று (நேற்று முன்தினம்) ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


அந்த மாணவனின் தற்கொலை என்ற முடிவானது எத்தகைய செய்தியை விட்டுச் சென்றுள்ளது என்பது குறித்து இங்கு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பினையும் அந்த மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பினையும் அவர்களது மன உளைச்சல்களையும் எடுத்துக்காட்டி நிற்பதாகவே செந்தூரனின் முடிவு அமைந்திருக்கின்றது.


மாணவன் செந்தூரனின் துன்பகரமான முடிவினை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. வடக்கு, கிழக்கு மக்களின் மனோநிலையையும் அவர்களது வெறுப்புத்தன்மையையும் தாங்கிக்கொள்ள முடியாத வகையிலேயே செந்தூரன் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொண்டுள்ளார்.


அந்த அர்த்தத்திலேயே நாம் இதனை நோக்குகின்றோம். வடக்கு, கிழக்கு மக்களின் வெறுப்புணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதளவிலான இந்த முடிவினையும் அதன் பின்னாலுள்ள செய்தியையும் வலியுறுத்தலையும் அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். அது மாத்திரமின்றி  தொட்டுக்காட்டப்பட்டுள்ள  இவ்விடயம் தொடர்பில் தாமதமில்லாத தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் செயற்பட வேண்டும்.


இதே நேரம் செந்தூரனின் தாயார், தந்தையார் மற்றும் குடும்பத்தாருக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.