தற்கொலைத் தாக்குதல்கள் ; இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்து இம்மானுவேல் அடிகளாரின் நேர்காணல் 

Published By: Priyatharshan

05 May, 2019 | 07:42 PM
image

உலகமே வேடிக்கையாக பார்த்து சிரிக்கும் அளவிற்கு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஆட்சியாளர்களே தற்போதும் ஆட்சிப்பீடத்தில் உள்ளார்கள். நாட்டுக்கே அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட அதனை யாருடைய தலையில் போடலாம் என்றுதான் ஆட்சிப்பீடத்தில் உள்ளவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் பொதுமக்களின் நலன்களை முன்வைத்து செயற்படுவதற்கு புதிய தலைவர்கள் வருவார்களோ என்ற நிலைமையே இருக்கின்றதென உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தேவாலயங்கள் உட்பட முக்கிய விடுதிகள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் பற்றி?

பதில்:- மனிதன், தமிழன், அதன் பின்னரே கிறிஸ்தவன் என்ற அடிப்படையில் தான் இந்த துன்பகரமான சம்பவத்தினை நோக்குகின்றேன். மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த தீவிரவாதத்தின் வரலாறு நெடியது. ஈராக்கில் அமெரிக்கப்படை நடவடிக்கைகளின் பின்னர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் சீரழிவுகள் ஏற்பட்டன. இந்த அடிப்படையில் தான் குறித்த தீவிரவாதம் பிறக்கின்றது.

முப்பது வருட போர் நிறைவுக்கு வந்திருந்தாலும் அந்தத் தாக்கத்தின் பிரதிபலிப்புக்களை தற்போதும் கொண்டிக்கும் சிறிய தீவான இலங்கையில் இலகுவாக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகளை பயங்கரவாதிகள் அடையாளம் காண்கின்றார்கள்.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிறிய நாட்டில் பெரும் இழப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் உலகத்திற்கு பாரிய அதிர்ச்சியை அளிக்கமுடியும் என்று அவர்கள் கருதியிருக்கின்றார்கள். அத்துடன், இதில் குறித்தவொரு சமூகத்தினை மட்டும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் கூறமுடியாது. உலகத்திற்கான அதிர்ச்சியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்ற கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது.

கேள்வி:- தாக்குதல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னதாகவே கிடைக்கப்பெற்ற நிலையில் அரசகட்டமைப்பு சரியாக இயங்கியிருக்கவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:- ஆம், இலங்கை அரசாங்கமும், பாதுகாப்புத்தரப்பும் தூக்கத்திலிருந்துள்ளன என்று தான் கூறவேண்டியுள்ளது. இந்த தரப்புக்கள் மூன்று தசாப்த போரை முள்ளிவாய்க்காலிலே முடிவுக்கு கொண்டுவந்து விட்டதை பெரும் சாதனையாக கருதுகின்றன. முப்படைகளைக் கொண்ட பயங்கரவாத அமைப்பினை ஒழித்துவிட்டோம் என்று உலகமெங்கும் சென்று பிரசாரம் செய்ததோடு, தாம் சாதனை புரிந்துவிட்டோம் என்ற அடிப்படையில் பல நாடுகளுக்கு போதனை செய்யவும் ஆரம்பித்தார்கள்.

உண்மையிலேயே அரசாங்கமும், படையினரும் பொய்யான பிரசாரத்தினை மேற்கொண்டே 27 நாடுகளில் விடுதலைப்புலிகளை தடைசெய்தார்கள். 20 நாடுகளிடமிருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவி மற்றும் ஆயுதங்களை பெற்றுக்கொண்டார்கள். அவற்றின் உதவியுடன் தான் 2009இல் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பினைச் செய்து முடித்தார்கள்.

அரசாங்கமும், படையினரும் இந்த உண்மையை மறந்தும், மறைத்தும் விட்டு வெற்றிக்கொண்டாட்டங்களை முன்னெடுத்தார்கள். வெற்றியீட்டி விட்டோம் என்ற மனநிலையும் வடக்கில் தான் பயங்கரவாதம் தலைதூக்கும் என்ன சிந்தனையிலும் தான் அதிகளவு படைகளை வடக்கில் நிறுத்திவைத்து விட்டு சந்தேகத்துடன் இருந்துள்ளார்களே தவிரவும் உரிய கட்டமைப்புக்களில் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள். தூக்கமடைந்து விட்டார்கள்.

கேள்வி:- தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தபோதும் அரசியல் முரண்பாடுகள் அத்தகவல்கள் பற்றிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தடையாக இருந்துள்ளன என்று உணர்கின்றீர்களா?

பதில்:- கிடைக்கப்பெற்ற எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் தலைவர்கள் அசமந்தமாக இருந்துவிட்டார்கள். அவ்வாறு இருந்துள்ளமையை மறைப்பதற்காக தற்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கும் விழைகின்றார்கள்.

இதனைவிடவும் ஜனாதிபதி, சர்வதேச படைகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று கூறுகின்றார். மறுபக்கத்தில் விசாரணைக்கான உத்தியோகத்தர்களை சர்வதேசத்திலிருந்து அழைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கின்றார். தீவிரவாதத்தினை அடியோடு ஒழிப்பேன் என்று கூறும் அவர் தனது நாட்டை விட்டுவிடுமாறு தீவிரவாத தலைவரிடத்தல் இரஞ்சுகின்றார். 

உலகத்தில் நாங்கள் சிறந்தவர்கள் என்ற தவறான நிலைப்பாட்டில் தான் தலைவர்கள் இருக்கின்றார்கள். அபாயத்தினை எதிர்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அபாயத்தின் நிமித்தம் வெளிநாட்டு உதவிகள் தேவைப்படுகின்ற போது அவற்றை புறக்கணிக்க முடியாது. ஆகவேரூபவ் சர்வதேசத்தினை புறந்தள்ளிச் செயற்பட முடியாது.

கேள்வி:- நாட்டில் மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு சாத்தியமா? அப்படியொன்றால் அதற்கு எத்தகைய செயற்றிட்டமொன்றை பரிந்துரைப்பீர்கள்?

பதில்:- இறை நம்பிக்கையில் செயற்படும் மதம் சார்ந்த தரப்புக்களிடையே புரிந்துணர்வுடனான ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். ‘என் சகோதரன் என் பாதுகாப்பாளன்’ என்ன வகையில் நாம் ஒவ்வொரு பொதுமகனையும் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து மதங்களுக்குள்ளேயும் அடிப்படைவாதம் காணப்படுகின்றது. அவ்வாறான போக்கினை முதலாவதாக தடுக்க வேண்டியுள்ளது. இறைவன் வழங்கிய வழிகாட்டுதல்களை வைத்து மனிதர்களே மதத்தினை கட்டியெழுப்புகின்றார்கள். மதங்கள் மனிதனாலே ஆக்கப்பட்டவை. மனிதனுக்காகவே மதங்கள் இருக்கின்றன. மதங்களுக்காக மனிதன் இல்லை.

இத்தகைய விடயங்களை உள்ளீர்த்து 1986 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் நான்கு மதத்தலைவர்களின் பங்கேற்புடன் “நற்சமூக நடுநிலையம்” என்ற பெயரில் மையமொன்றை நடத்திவந்திருந்;தேன். மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்கான வழிவகைகளை செய்வதே நோக்கமாக இருந்தது. ஆகவே, மதங்கள் தமது நோக்கங்களை தவறவிடாது மதங்கள் மதில்களுக்குள் மட்டுப்படாது மனிதர்களுக்காக சேவையாற்ற வேண்டும். இச்சந்தர்ப்பத்தினை சரியாக நகர்த்திச் செல்வது அவசியமாகின்றது.

கேள்வி:- இருதசாப்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தில் தங்கியிருக்கு நீங்கள் அங்குள்ள நிலைமைகள் எவ்வாறுள்ளதாக உணருகின்றீர்கள்?

பதில்:- 21வருடங்களுக்கு பின்னர் நாடுதிரும்பி கடந்த ஒருவருடமாக வடக்கிலேயே தங்கியிருக்கின்றேன். எமது மக்களை பார்க்கின்றபோது அவர்களுக்காக நான் கண்ணீர் விடுகின்ற நிலைமை தான் உள்ளது. மக்கள் விரக்தி மனநிலையில் தான் இருக்கின்றார்கள். இளைஞர்கள் தாயகத்தில் வாழ்வதற்கு விரும்புகின்றார்களே இல்லை. வாள்வெட்டுக்குழுக்கள் உருவாகியுள்ளன. மக்கள் நடைப்பிணங்களாக உள்ளனர்.

நான் வடக்கின் பல பாகங்களுக்கும் சென்று பார்க்கின்றபோது வெறிச்சோடியிருக்கின்ற நிலைமையே உள்ளது. தமிழர்கள் வாழ்வதற்கான சூழலில்லை என்ற மனநிலையிலேயே இருக்கின்றார்கள். படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

அரச பயங்கரவாதத்தின் காரணத்தினால் எதிர்காலம் இல்லை என்று தமிழ் இளைஞர்கள் உணர்ந்த நிலையில் தான் விடுதலை அமைப்புக்கள் உருவாகின. குறிப்பாக விடுதலைப்புலிகள் போன்ற பலமான அமைப்புக்கள் உதயமாகின.

தமிழர்களாகிய நாம் முப்பது வருட போரில் பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளோம். எமது பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் காலம்கடத்தியே வருகின்றார்கள். அத்தகைய நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்குமாகவிருந்தால் அபாயகரமான எதிர்காலமொன்றே ஏற்படும்.

குறிப்பாக விரக்தியின் காரணமாக இளைய தமிழ்ச் சமூகத்தினர் வன்முறை பாதைக்கு இலகுவாக இட்டுச் செல்லப்பட்டு விடுவார்கள். ஆகவேரூபவ் அதற்கான நிலைமைகளை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கான நம்பிக்கையை ஊட்டி பாதுகாக்க வேண்டும். இதனை தென்னிலங்கை தலைவர்களும், தமிழ்த் தலைவர்களும் கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும்.

கேள்வி:- நாட்டின் பிரஜைகள் பாதுகாப்பு தொடர்பில் ஆட்சியாளர்கள் எத்தகைய கரிசனையை கொண்டிருக்கின்றார்கள் என்று கருதுகின்றீர்கள்?

புதில்:- 2015 இல் ஆட்சியை நடத்துவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறிய ஆட்சியாளர்கள் கடந்த ஆண்டு ஒக்டோபரில் சர்ச்சைகளை உருவாக்கி 51நாட்கள் நாட்டில் ஆட்சியாளர்களே இல்லாத நிலைமையை உருவாக்கினார்கள். உலகமே வேடிக்கையாக பார்த்து சிரிக்கும் அளவிற்கு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்கள்.

அத்தகையவர்கள் தான் தற்போதும் ஆட்சிப்பீடத்தில் உள்ளார்கள். அவர்கள் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. அது வீழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நாட்டுக்கே அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட அதனை யாருடைய தலையில் போடலாம் என்றுதான் ஆட்சிப்பீடத்தில் உள்ளவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் பொதுமக்களின் நலன்களை முன்வைத்து செயற்படுவதற்கு புதிய தலைவர்கள் வருவார்களோ என்ற நிலைமையே இருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தின்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற அடிப்படையில் மதத்தலைவர்களும் ஒன்றிணைவதற்கு தயாராக இருக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடயமாக தீவிரவாத தாக்குதல்கள் காணப்படுகின்றன. ஆகவே பெரும்பான்மை மதத்தலைவர்கள் உட்பட அனைத்து மதத்தலைவர்கள் இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்.

முரண்பாடுகளை களைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

கேள்வி:- நவாலி பேருதுவானவர் தேவாலயம், மன்னார் மடு திருத்தலம் ஆகியன உட்பட தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் வரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் மதத்தலைவர்களின் செயற்பாடு விமர்சனத்துக்குள்ளதாகின்றதே?

பதில்:- தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்காக மதத் தலைவர்கள் பகிரங்கமாக குரல்கொடுத்ததாக இல்லை. அவற்றில் போதியளவு கரிசனை கொண்டிருக்கவில்லை. ஈடுபாடுகளையும் காட்டியிருக்கவில்லை.

அக்காலத்தில் குருமுதல்வராக கடமைகளை புரிந்து வந்த நான் தனித்து குரல்கொடுத்தேன். தாக்குதல்களை வன்மையாக கண்டித்தேன். ரூடவ்ற்றில் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது. அன்றும் கூட முதலில் மனிதனாகரூபவ் தமிழனாக கிறிஸ்தவனாக நின்று தான் போராடினேன்.

ஆனால், எனது கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது நான் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக கூறினார்கள். நான் மக்களுக்கு ஆதரவாகத்தான் குரல்கொடுத்தேன். ஆனால் என்மீது பழிபோட்டார்கள்.

1990 இல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து இரு விடயங்களை முன்வைத்து கலந்துரையாடினேன். நூங்கள் இந்தியாவை பகைக்க முடியாது என்றும்ரூபவ் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் வரவேண்டும் என்றும் கோரினேன். இதற்கு ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் சாட்சியாக இருக்கின்றார்.

ஆக, மதத்தலைவர்கள் உண்மைக்கும் நீதிக்குமாக செயற்பட வேண்டும். துரதிஷ்டவசமாக இலங்கையில் உள்ள மதத்தலைவர்கள் உண்மை, நீதியின் பக்கம் நிற்பதற்கு துணிவில்லாதவாகளாக உள்ளார்கள்.

ஆகவே எதிர்வரும் காலத்திலாவது அந்த நிலைமை மாறவேண்டும். 

கேள்வி:- தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொறுப்புக்கூறலை நடைமுறைச்சாத்தியமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தரப்பு பாரிய எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் புரட்சிரூபவ் தற்போதைய தாக்குதல்கள் ஆகியன அவற்றை கிடப்பிற்கு கொண்டு செல்லும் நிலைமையை உருவாக்கி உள்ளதே?

பதில்:- சிங்களப் பெரும்பான்மை மக்களிடத்தில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படவில்லை. சிங்கள, பௌத்த அடிப்படைவாதத்துடன் தான் அவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள். இந்நிலைமை நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை ஒதுக்கி நடத்தும் போக்கினையே கடைப்பிடிக்கின்றார்கள்.

தற்போதும் அந்த நிலைமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. தேசிய கொடியே அதற்கு நல்ல உதாரணமாக இருக்கின்றது. தற்போது வரையில் நான் இந்த தேசிய கொடிக்கான மரியாதையை அளிக்கவில்லை.

துமிழ்த் தரப்பினை பொறுத்தவரையில்ரூபவ் தாயகத்தில் உள்ளவர்கள் விரக்தியிலும் அதிருப்தியிலும் உள்ளார்கள். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது. நாம் நம்பிக்கையை கைவிடக்கூடாது. எமது இருப்பினையும் இலக்கினையும் அடைவதற்கான சர்வதேச பிடியை கைவிடக்கூடாது. பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய பிரஜைகளையும் சம அந்தஸ்துடன் மதித்து நடத்துகின்ற பொது உணர்வினை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் எமது இருப்பினை நாம் பாதுகாக்க வேண்டும். புலம்பெயர்ந்த மக்களும் இந்த விடயங்களில் ஆழமான கவனத்தினைச் செலுத்தி செயற்பட வேண்டும். இந்த விடயத்தினை பொருட்டில் கொள்ளாது நடப்போமாயின் இலங்கை தமிழினத்தின் மீதும் அடிமை சாசனம் எழுதப்படும் ஆபத்தான நிலைமையே ஏற்படும்.

கேள்வி:-அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக்களை நல்கும் தமிழ்த் தலைமைகளும்ரூபவ் அவர்களுக்கு ஆணை வழங்கிய தமிழ் மக்களினதும் எதிர்காலம் என்ன?

பதில்:- எனக்கு வயது முதிர்ந்து விட்டது. எஞ்சிய காலப்பகுதிக்குள் தமிழ் மக்கள் அனைவரும் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளில் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றேன். அது நடைபெறுமோ தெரியாது. இருந்தாலும் எமக்குள் உள்ள சாதி, சமய, பிரதேச பிரிவினைகளை களையாது ஜெனீவாவிற்குச் சென்று நீதி கோருவது பயனற்றது. ஆகவே, தமிழ் மக்களுக்குள் இருக்கும் பிரிவினைகள் ஒழிய வேண்டும். எம்மை நாமே முதலில் சீர்திருத்த வேண்டியுள்ளது. அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். சமாதானம், விடுதலை கோரும் தமிழ் சமூகம் முதலில் தனக்குள்ளே ஒற்றுமையும் சமாதானமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

( நேர்காணல் - ஆர். ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13