சுதந்திரத்திற்குப்  பின்னர் இந் நாட்டை மாறிமாறி ஆட்சி செய்த பட்சைக்கட்சிக் காரார்களும், நீலக்கட்சிக் காரார்களும் மலையக மக்களை புறக்கணித்தே வந்தனர். எனினும் தற்போது பச்சைக் கட்சியும், நீலக் கட்சியும் இணைந்து ஏற்படுத்தியிருக்கின்ற நல்லாட்சியிலும்கூட எமது மலைய சமூகத்தை ஓரம் கட்டி செயற்படுகின்ற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் நேற்று சபையில் அரசாங்கத்தின்மீது கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.


பத்து வருடங்களுக்கு மேல் குடியிருக்கும் குடியிருக்கும் பட்சத்தில் அவ்வீடு குடியிருப்பாளருக்கு சொந்தமாக்கப்டும் என அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கூறப்படுகின்றது. எனினும் 180 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மலைய தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை ஒரு துண்டு காணியை உரிமையாக்கிக் கொடுப்பதற்கு முன்வராதிருப்பது நாட்டுக்கே சாபக்கேடாகும். அத்துடன் அது வெட்க்ப்பட வேண்டிய விடயமாகவும் உள்ளது என்றும் அவர்  குறிப்பிட்டார்.


இதேவேளை மலையக மக்களின் பிரச்சினைகளையும், மலையகத்தின் அபிவிருத்தியையும் ஆராய்ந்து மேற்கொள்வதற்கென ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று இந்த சபையினூடாக கோரிக்கையொன்றை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.


பாராளுமன்றத்தி்ல நேற்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


வேலுகுமார் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,


ஜனவரி 8 ஆம் திகதி இந் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 17 ஆம திகதியின் பின்னர் நல்லாட்சியொன்றை ஸ்தாபிப்பதற்கும் எமது மக்கள் பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றனர். எனினும் நகரம், கிராமம் மற்றும் தோட்டம் என்ற வரையறையை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளில் தோட்டம் என்பது திட்டமிடப்பட்ட வகையில் புறக்கணிக்கப்படுவதை காண முடிகின்றது. அதேநேரம் வரவு செலவுத் திட்டத்திலும் கூட தோட்டம் தொடர்பாக எதுவும் காணமுடியவில்லை. 


எமது மக்களின் எதிர்பார்ப்பு கனவு ஆகியவை இன்று கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. 180 வருடங்களாக எமது மக்கள் இந் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது தேவைகள், அபிலாஷைகள் பிரச்சினைகள் என்பவற்றை எவரும் கண்டு கொள்ளவில்லை. 


நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த பச்சைக்கட்சிக் காரார்களும் சரி, நீலக்கட்சிக்காரர்களும் சரி இரு தரப்புமே மலைய சமூகத்தை புறக்கணித்தே வந்ததை வேதனையுடன் ஞாபகப்படுத்துகின்றேன். புள்ளி விபரங்களின் அடிப்படையில் கூட கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி என்பன ஏனைய பிரதேசங்களை விட பெருந்தோட்டங்கள் பின்தங்கிக் காணப்படுகின்றன. 


நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்குகின்ற வகையில் அமைச்சுக்களை உருவாக்கி பாரிய நிதித் தொகைகளை ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம் ஒட்டுமொத்த மலையத்துக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி என்ற ஒரே அமைச்சை உருவாக்கி அதற்காக 686.8 மில்லியன் ரூபாவை மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது திட்டமிட்ட வகையில் ஓரம்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகையாகவே பார்க்கப்பட வேண்டும். 


மலையக மக்களின் காணி உரிமைப் பிரச்சினை நாட்டுக்கே சாபக் கேடாக உள்ளது. அத்துடன் இது தொடர்பில் வெட்கப்படவும் வேண்டியுள்ளது. 10 அடி அகலமும், 10 அடி நீளமும் என்ற வீட்டுக்குள்ளேயே அந்த மக்கள் முடக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இருக்க 10 வருடங்களுக்கு மேல் குடியிருப்போருக்கு குறித்த வீடு சொந்தமாக்கப்படுமென வரவு செலவுத் திட்டத்தில் கூறப்படுகிறது. ஆனால் 180 வருடங்களுக்கு மேலாக மேற்கண்டவாறு வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு ஒரு துண்டு காணியையும் உரிமையாக்கப்படவில்லை. 


ஆயிரம் மில்லியன் ரூபாவை மலையக வீடமைப்புக்காக ஒதுக்கீடு செய்வதாக கூறியிருக்கின்ற அரசாங்கம் வீடுகளை எவ்வாறு அமைப்பது செலவீனங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பிலான தரவுகள் எதனையும் முன்வைக்கவில்லை. எனவே இதனை தெ ளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது.


ஆசிரியர் உதவியாளர்களாக 3172 பேரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதே மலையகத்திலிருந்து 16 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்திருந்தனர். வெறும் 6000 ரூபா கொடுப்பனவுக்கே இந்தளவில் தொகையினர் விண்ணப்பித்திருந்தார்களேயானால்  மலையகத்தில் வேலைவாய்ப்பை எத்தனை பேர் எதிர்பார்த்திருந்தனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 


ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் மலையக மக்கள் இன்றயை தேசிய அரசாங்கத்திற்கும் பாரிய ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளதன் காரணத்தால் அரசாங்கமானது எமது மக்களை ஒதுக்கிச் செயற்பட வேண்டாம் என்றும் அவர்களையும் தேசய நீரோட்டத்துக்குள் இணைத்துக் கொண்டு பயணிக்குமாறும் கேட்டுக்  கொள்கிறேன். மேலும் மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிவதற்கும் மலையகத்தின் அபிவிருத்திக்கும் என விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு முன்வர வேண்டும் என்பதுடன் மலையக மக்களின் காணிப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் தனியான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.