பயங்கரவாதத்தை இல்லாதொழித்து அமைதியான சூழலைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Published By: Vishnu

26 Apr, 2019 | 04:48 PM
image

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியும் சுதந்திரமுமிக்க சூழலை விரைவில் ஏற்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வமத ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொடூர பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இச்செயற்பாடுகளில் நாட்டின் பாதுகாப்பு துறையினர் மீது தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எந்த வகையிலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்குள் கொண்டுவர தான் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எதிர்பாராத இந்த சந்தர்ப்பத்தில் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட இடமளிக்காது பொதுமக்கள் மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் பொறுப்பினை நிறைவேற்ற நாட்டின் அனைத்து மதத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

நாட்டில் நிகழ்ந்த துன்பியல் சம்பவத்தையடுத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் கிறிஸ்தவ மக்களும் செயற்பட்ட அமைதியான முறையினை பாராட்டிய ஜனாதிபதி, அந்தவகையில் அவர்கள் நாட்டிற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழலை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதோடு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதன்போது முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, 

இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒருபோதும் இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என்பதோடு பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றனர் என்றும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்காக நாட்டின் புலனாய்வு துறையை மேலும் பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்போது சுட்டிக்காட்டிய பேராயர் அவர்கள், கடந்த சில வருடங்களுக்குள் இடம்பெற்ற சர்வதேச ஊடுருவல்கள் நாட்டின் புலனாய்வு துறையினரை செயலிழக்க செய்ய ஏதுவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பிரிவின் அனுநாயக்கர் வண. திபுல்கும்புரே விமலதம்ம தேரர், இலங்கை சம்பிரதாயத்துடன் புதிதாக இணைந்து கொண்டுள்ள இஸ்லாமிய பெண்களின் ஆடை முறை ஒட்டுமொத்த மக்களினதும் பாதுகாப்பு கருதி மாற்றத்திற்கு உள்ளாக வேண்டுமென தான் கருதுவதாக தெரிவித்தார். இன ரீதியில் பாகுபடுத்தி கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாடசாலைகள் நீக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய தேரர், பிரிந்து செயற்படும் போது பிரிவினைகள் ஏற்படுமேயன்றி ஒற்றுமை உணர்வு ஏற்படாது என்றும் மொழி அறிவினை மேம்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் தலைவர் சேக் மௌலவி ரிஸ்வி, இந்த பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தமது அமைப்பு 2014 ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினருக்கு தகவல்களை வழங்கிய போதிலும் அவ்விடயம் குறித்து அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மௌலவி அர்க்ரம் நூர் அமீத், நீண்டகாலமாக இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் நாட்டின் ஏனைய இனங்களுடன் சுமூகமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதோடு, மிகச் சிறியதொரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த மிலேச்சத்தனமாக செயலினால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

அத்தோடு இந்த பயங்கரவாத குழுவினரை இல்லாதொழிப்பதற்கு உயரிய ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க தமது சமூகம் தயாராக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சில பிரதிநிதிகளும் இந்த பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிய வந்துள்ளதாகவும் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு பின்னால் மறைந்து அவர்கள் செயற்படும் விதம் குறித்து ஜனாதிபதி அவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இதன்போது கருத்து தெரிவித்த வண. கொடபொல அமரகித்தி தேரர் குறிப்பிட்டார்.

மதகுருமார்கள் பலரும் இந்த சர்வ மத குழுவிற்கு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதன்போது முன்வைத்தனர். பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழித்து மக்கள் மத்தியில் சமாதானத்தையும் நம்பிக்கையையும்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இவ்வனைத்து கருத்துக்களும் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05