சீனாவில் அடுக்குமாடி கட்டடத்தில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே  உயிர் இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்நிலையில், தொழிலாளர்கள் சிலர் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்தது.

இதனால் லிப்ட் அதிவேகத்தில் தரையில் விழுந்தது. குறித்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் மீட்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சுவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.