பொறுப்பு கூறப்போவது யார்?

Published By: R. Kalaichelvan

23 Apr, 2019 | 03:14 PM
image

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஐ தாண்டியுள்ளது. 

காயமடைந்தோரில் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் உறைந்துபோய் உள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவமானது நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமைந்திருக்கிறது. 

மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தணிப்பதற்கும் மேலும் வன்முறைகள் வெடிக்காது தடுப்பதற்கும் அரசாங்கமானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த செயற்பாடானது பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. குண்டுத் தாக்குதல்களை காரணியாக வைத்து நாட்டில் இனவாத, மதவாத வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும் சதி மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் நிலவியது.

இந்த அச்சத்தை போக்கும் வகையில் அரசாங்கமானது துரிதகதியில் செயற்பட்டிருந்தது.

நாட்டில் உடனடியாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டதுடன் பேஸ் புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்  கம் முடக்கியிருந்தது. அத்துடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்  கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து பல்வேறு விதமான வதந்திகளும் பொய்யான தகவல்களும் பரப்பப்பட்டு வந்தன. 

இதனைவிட குண்டுத்தாக்குதலின் கோர காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியிருந்தன. இதனைவிட வன்முறைகளை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளும் இடப்பட்டன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் வன்முறைகளுக்கு தூபமிடப்படலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அரசாங்கமானது நாட்டில் ஊரடங்கு  சட்டத்தை அமுல்படுத்தியதுடன் சமூக வலைத்தளங்களையும் தடைசெய்திருந்தது.இத்தகைய நடவடிக்கை நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றத்தை தணிப்பதற்கு உதவியிருக்கின்றது.

தற்போதைய நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் காரொன்றும் வேனொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் சில இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கொழும்பு கொச்சிக்­கடைப் பகுதியில் நேற்றும் குண்டொன்று வெடிக்கவைக்கப்­பட்­டுள்ளது. சந்தேகத்துக்கிடமான வாகனமொன்றை சோதனை­யிட்டபோதே விசேட அதிரடிப்படையினரால் இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதல்கள் குறித்து  தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே இந்த தாக்குதலின் நோக்கமென்ன? இதன் பின்னணி என்ன? இந்த தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பவை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளன. இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் உள்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவிகளை வழங்க தயார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாடுகளின் தலைவர்களும் அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் முன்னரே புலனாய்வுத் துறையினர் எச்சரித்திருந்ததாகவும் அதனைக் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்காமையின் காரணமாகவே பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் தற்போது கருத்து வெளியிட்டுள்ளனர்.  மோசமான குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் என அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தபோதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாமையும் எமக்கு அதுகுறித்து அறிவிக்கப்படாமையும் பாரதூரமான பிரச்சினையாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் விசேட ஊடகசந்திப்பை நடத்திய பிரதமர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம். இதில் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த தாக்குதல் குறித்து தகவல் முதலில் தெரிவிக்கப்பட்டும் அது குறித்து கவனம் செலுத்தாமையாகும். இதுகுறித்து ஆராயவேண்டியுள்ளது என்றும் பிரதமர் கூறியிருக்கின்றார். 

இதே போன்றே பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­தன கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் அடிப்­ப­டை­வாத அமைப்பு உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் தொடர்பில் தேசிய புல­னாய்வுப் பிரிவு எச்­ச­ரித்­தி­ருந்­த­துடன் இலங்­கையில் அவர்­களின் செயற்­பா­டுகள் குறித்தும் கண்­கா­ணித்து வந்­தது. கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, நீர்­கொ­ழும்பு  பகு­தி­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் பெரும்­பா­லா­னவை தற்­கொலைத் தாக்குதல்ளாகவே காணப்­ப­டு­கின்­றன. தேசிய புல­னாய்வுப் பிரிவு மற்றும் அரச புல­னாய்வுப் பிரிவு என்­பன இவ்­வா­றான தாக்­குதல் குறித்து தக­வல்­களை வழங்­கி­யி­ருந்­தன. ஆனால் இவ்­வாறு கொடூ­ர­மாக தாக்­கு­தல்கள் அமை­யு­மென எதிர்­பார்க்­க­வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.  

இதே­போன்றே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று நடை­பெற்ற அமைச்­சர்கள் கூட்­டத்தின் பின்னர் அல­ரி­மா­ளி­கையில் கருத்து தெரி­வித்த அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தாக்­குதல் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அர­சாங்க புல­னாய்வுப் பிரிவு பொலிஸ்மா அதி­ப­ருக்கு அறி­வித்­தி­ருந்­த­தா­கவும் 11ஆம் திகதி அமைச்­ச­ரவை பாது­காப்பு பிரி­வுக்கும் இவ்­வி­ட­யங்கள் குறித்து அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி தெளி­வூட்­ட­வில்லை என்றும் பாது­காப்புச் சபை கூட்­டங்­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அழைப்­ப­தில்லை என்றும் அவர் மேலும்   குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கம் சமபொறுப்பு ஏற்பதாகவும் அதிலிருந்து விலக வில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார். 

இதனைவிட தமிழ் முற்போக்கு கூட்டணி­யின் தலைவரும் அமைச்சருமான மனோ கணே­­­சனும் கடந்த வாரமே புலனாய்வுப் பிரிவினர் தமது  பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்திருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். 

இவற்றிலிருந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை ஏற்கனவே பாதுகாப்புத் தரப்புக்கு விடுக்கப்­பட்டுள்ளமை நன்கு புலனாகின்றது. இதனைவிட இந்திய அரசாங்கமும் இத்தகைய தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில் புலனாய்வுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் அதுகுறித்து கவனம் செலுத்தாது அலட்சியப்படுத்தியமை பெரும் தவறாக அமைந்துள்ளது. 

இந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பினர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை குற்றம் சாட்டும் வகையில் கருத்துகளை கூறி வருகின்றனர். உண்மையிலேயே புலனாய்வுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்திருந்தபோது அதுகுறித்து கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்த பேரனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் பெருமளவு வெடிமருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டி­ருந்தன. இவ்வாறு பல்வேறு வகையிலும் சமிக்ஞைகள் காண்பிக்கப்­பட்டபோதிலும் உரிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்­படாமை பாரிய குறைபாடாக அமைந்திருக்கின்றது.

தவிர்த்திருக்கக்கூடிய ஒரு அனர்த்தம் கவனயீனம் காரண­மாக இடம்பெற்றிருக்கின்றது. எனவே இந்த தவறுக்கு பொறுப்­பேற்கப்போவது யார்? அவ்வாறு தவறிழைத்தவர்கள் இதற்குப் பிராயச்­சித்தமாக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என்பதே மக்கள் மத்தியில் இன்றுள்ள கேள்வியாக உள்ளது. மேற்குலக நாடுகளில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதற்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலகியிருப்பார்கள். ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி தப்பிக்கும் தன்மையே காணப்படுகின்றது.

இத்தகைய பேரனர்த்தம் ஏற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்குமிடையிலான முரண்பாடான நிலைமையும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது ஏற்படுகின்றது. எனவே இந்த அனர்த்தத்தை கருத்தில் கொண்டாவது இனியாவது நாட்டின் தேசிய பாதுகாப்புடனும் மக்களின் உயிர்களுடனும் விளையாடாது சகல தரப்பினரும் ஒன்றிணைந்து பாது­காப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த அனர்த்தத்துக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இனியாவது வரலாற்றில் தவறிழைக்காது அரசியல் சுயநல லாபங்களை கைவிட்டு ஒற்றுமையாகவும் உறுதிப்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04