டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி. 

நேற்றிரவு டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் கெயில் 69 ஓட்டங்களையும் மன்தீப் சிங் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.  

டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டுகளையும் அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 164  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியொர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர்.

தவான் அரை சதமடித்து 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஐங்கிராம் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவுசெய்யப்பட்டார்.