(எம்.ஆர்.எம்.வஸீம்)

எமது கோரிக்கைகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் பதிலளிப்பார். அவரின் பதிலை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்துக்கு வருவோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடந்த புதன் கிழமை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பாக எங்களுக்கு சில விமர்சனங்கள் இருக்கின்றன. அது தொடர்பாக எமது ஜனநாயக இடதுசாரி முன்னணி அவரை கடந்த புதன் கிழமை சந்தித்து தெளிவுபடுத்தினோம். 

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக  சமல் ராஜபக்ஷவை நிறுத்துவதன் தேவைப்பாடு தொடர்பாகவும் அவரிடம் எடுத்துக்கூறினோம்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதி வேட்பாளராக எமது பக்கத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டால் நாங்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது தொடர்பாக எமது கட்சி தீர்மானிக்கும். அதனால்தான் முன்கூட்டியே கோத்தபாய ராஜபக்ஷ் தொடர்பாக நாங்கள் தெரிவித்துவந்த விமர்சனங்கள் மற்றும்  எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை குறித்த சந்திப்பின்போது அவரிடம் கையளித்தோம் என அவர் தெரிவித்தார்.