100 வயதிலும் சாதனை படைக்கும் பெண்

Published By: Daya

17 Apr, 2019 | 12:47 PM
image

 அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் 100 வயதிலும் யோகா பயிற்சியாளராக கடமையாற்றி வருகிறார். 

இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100ஆவது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார். 

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

 இதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.

மேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.

எனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசானத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயோர்க் நகரில் 'வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி நிலையம்' என்ற பாடசாலையை ஆரம்பித்தார்.

இளம் வயதிலேயே யோகாவில்  கடினமான ஆசனங்களை செய்து காட்டி, ஆண்களால் செய்ய முடியும் என்றால், என்னாலும் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தவோ யோகாவில் மிக முக்கியமான பயிற்சியான மூச்சு பயிற்சி குறித்து அனைவருக்கும் கூறி வருகிறார். நியூயோர்க்கில் தற்போது தனியாக வசிக்கும் தவோவுக்கு நண்பர்கள் வட்டாரம் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆதரவாக உள்ளனர். 

இந்த வருடம் ஆகஸ்ட் 13ஆம் திகதி 101 ஆவது வயதை எட்டவுள்ள தவோ, இன்னும் சுறுசுறுப்பாக தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் இந்த ஆண்டிற்கான சிறந்த சாதனையாளராக தெரிவுச் செய்யப்பட்டு, பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மேலும் அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற 'அமெரிக்கா காட் டேலண்ட்' எனும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பால்ரூம் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளார். 

‘செயற்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right