(ப.பன்னீர் செல்வம்) 

மின்சாரத்துறையில் இலங்கையை ஆக்கிரமிக்கும் சதித்திட்டமே  இந்தியாவின் சம்பூர் அனல்மின்   உற்பத்தித் திட்டமாகும்.  எனவே,  இதனை கடுமையாக எதிர்க்கின்றோம் எனத் தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கமான  இலங்கை மின்சார சேவையாளர் சங்கம், இந்தியாவுடனான சம்பூர் உடன்படிக்கையின் விபரங்களை முடிந்தால் அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் சவால்விடுத்தது. 

இது தொடர்பில் இலங்கை மின்சார சேவையாளர்  சங்க  பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால்  மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் சம்பூர்  அனல் மின் உற்பத்தித்திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்கப்பாட்டுடனேயே இந்தியாவினால்   ஆரம்பிக்கப்பட்டது. 

இன்று கூட்டமைப்பினர் இதனை எதிர்ப்பது மக்களை ஏமாற்றும் நாடகமாகும். 

இத்திட்டத்திற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம், மக்கள் மற்றும் சூழலியலாளர்களின் எதிர்ப்புகள் தலைதூக்கியதால் அதனை எதிர்ப்பது போன்ற  நாடகத்தை கூட்டமைப்பினர் அரங்கேற்றியுள்ளனர். 

சம்பூர் திட்டத்தில் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், ஏன் குப்பை அகற்றுபவர்கள் கூட  இந்தியர்களே தொழில்புரிவதோடு  அத்திட்ட பகுதிகளில் இலங்கையர்கள் எவரும்  உள்ளே  செல்ல முடியாது. 

இங்கு 500 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 

அதேவேளை சென்னையில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று இரண்டாம் கட்டமாக  அமைக்கப்படவுள்ளது. இதில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்வதோடு,  அதனை கடலுக்கடியில் கேபிள் மூலம் இலங்கைக்கு  வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் பின்னணியிலும்  சதித்திட்டடம் உள்ளது.