மீளக்குடியமர்த்தப்பட்ட எமது வாழ்வாதாரத்தில் கைவைக்காது சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்தை நிறுத்த உதவுங்கள் என   என சம்பூர் வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையம் காரணமாக விவசாயிகள், வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள்,கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எற்படும் பாதிப்பு வெளிப்பாடு பற்றிய கலந்துரையாடல் ஒன்று  சம்பூர் பொது நோக்கு  மண்டபத்தில் ஞாயிறு மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீளக்குடியமர்த்தப்பட்ட சம்பூர் கிராம பெண்கள், விவசாயிகள் கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் மேலும் இங்கு குறிப்பிடுகையில்,

எமது கிராமத்தில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுமாகவிருந்தால் இன்னும் 5வருடங்களில் எமது தோட்டச்செய்கையை இழக்க வேண்டிஏற்படும். இவ்வாறான வளங்களை நம்பியே நாம் சம்பூரில் மீளக்குடியேற வேண்டும் என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக இருந்தோம்.

நாம் இங்கு மீளக்குடியமர்த்தப்பட்டமைக்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய  நல்லாட்சி அரசின் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

நாங்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் தேவையான எந்த வித அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யபடாத நிலையிலும் சிறியளவிலாவது வீட்டுத்தோட்டங்களை செய்கை பண்ண ஆரம்பித்து விட்டோம். வயல் நிலங்களை  செய்கை பண்ண ஆரம்பித்து விட்டோம்.சுமார் 90 வீதமான மக்கள் வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு விவசாயத்தை செய்பவர்கள். சம்பூரில் சுமார் 72 வரையிலான புராதன குளங்கள் உள்ளமை அதற்குச்சான்றாகும்.

எங்களது கிராமம் நிலக்கீழ் நீர்  வசதியைக்கொண்டது. இரண்டு அடி  தொடக்கம் மூன்றடிக்குள்  நீர்வளம் உள்ளன.  கிணறுகளில் வற்றாத நீர் 10 தொடக்கம் 15 அடி ஆழத்தில்  நிறைவானதாக கிடைக்கின்றது.

 அதனால்தான் நாம் வீடுதோறும் இயற்கை விவசாய முறையைப்பின்பற்றி  வீட்டுத்தோட்டங்களை செய்து வந்தோம். அவை தற்சமயம் பாலைவனமாக மாற்றப்பட்டு தரப்பட்டுள்ளன. ஆனாலும் மீள எல்லாவற்றையும் படிப்படியாக ஆரம்பித்துள்ளோம். 

எம்மில் பலர் சிறியளவில் அறுவடைசெய்தும் வருகின்றோம். நீங்கள் நேரடியாக வந்து பாருங்கள் நிலக்கீழ் நீர்வளத்திற்கு  இரண்டு காரணம் உள்ளன. நிலத்தில் காணப்படும் சுண்ணக்கல் பாறையும் மேலேகாணப்படும் வயலும் குளங்களும் காரணமாகும். இவை இருப்பதனால் எந்த நேரமும் நீர் நிலத்தில் சேமித்து  வைக்கப்படுவதனால் வீட்டுத்தோட்டச் செய்கைக்கு இப்பகுதி பேர்போன இடமாகவுள்ளது. 

இதனால் நாமும் வீட்டத்தோட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றோம். சோளம், கச்சான், மிளகாய், தக்காளி, கத்தரி, வெண்டி என பல பயிர்களையும் செய்கின்றோம்.

தற்சமயம் அனல் மின்நிலயம் வருவதனால் 11 குளங்கள் இல்லாமல் அழிக்கபடப்போகின்றன. இவற்றுள் வரும் ஆயிரம் ஏக்கர் வயல்காணிகள் செய்கை பண்ணமுடியாத நிலமைஎற்படப்போகின்றன. காலத்துக்குகாலம் சேமிக்கபடும் நீர் வளம்  பாதிக்கப்படும் .   பசுமையான நிலையான மற்றும் பருவகாலப்பயிர்கள் இன்றி பாலைவனமாக்கப்பட்ட காணிகளிலும் நீர் இலகு வாக வற்றும் நிலைமை தற்சமயம் ஏற்பட்டுள்ளன. 

இவ்வாறு  ஆனல் மின்நிலையம் ஏற்படுத்தப்பட்டு நிலைமை தொடருமாகவிருந்தால்  குறைந்தது 5வருடங்களில்  எமது தோட்டச்செய்கையை செய்கைபண்ணமுடியாத நிலைமை ஏற்படுவது உறுதியாகிவிடும்.

மேற்படிகுளங்களை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயக்குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதுடன்  வயல் செய்கை சேனைச்செய்கையையும் செய்து வருகின்றனர். 

அனல் மின்நிலையம் ஏற்படுத்தப்பட்டால் கால்நடை வளர்ப்பு கேள்விக்குறியாகும், வயல்செய்கைக்கான நீர் இன்றி இடமின்றி செய்கை பாதிக்கப்படும் காலப்போக்கில் வறட்சி ஏற்படும் இதனால் எமது பூர்வீக வீட்டுத்தோட்டம், விவசாயம் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை விட பல தாக்கங்கள் வருமென பலரும் கூறுகின்றனர். எனவே மீளக்கடியமர்த்தப்பட்ட எமது வாழ்வாதாரத்தில் கைவைக்காது அனல் மின்நிலயத்தை நிறுத்த உதவுங்கள்.

அனல்மின்நிலயத்தால் வீரபுட்டியர்குளம், செம்மணியா குளம், புலவன்குளம், பெரிய நைந்த குளம், சின் நைந்தகுளம், மொட்டையாண்டிகுளம், வேம்புக்குளம், ஈச்சங்குளம், இலுப்பைக்குளம், தொடுவான்குளம், சம்புக்குளம்  போன்ற குளங்கள் அழிக்கபடவுள்ளன. 

இவ்வாறான காரணங்களால் நாம் இந்த அனல் மின்நிலயத்தை வெறுக்கின்றோம். எனவே செய்த உதவியுடன் இந்த அனல்மின்நிலையத்திட்டத்தையும் இல்லாதொழித்து சம்பூரின் வாழ்வாதார அழிவை தடுத்து நிறுத்தங்கள் என நிகழ்வில் கலந்துகொண்டோர்  தெரிவித்தனர்.