தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக முதல்முறையாக சென்னையில் நடைபெற்ற லிபரா நட்சத்திர கிரிக்கெட்போட்டிக்கான சாம்பியன் கோப்பையை நடிகர் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணியினர் வென்று சாதனைப் படைத்துள்ளனர். 

 தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக வளாகம் கட்டுவதற்கான நிதி திரட்டும வகையில் முதன்முறையாக லிபரா நட்சத்திர கிரிக்கெட்" போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.அத்துடன் நடிகர்கள் நாகார்ஜுனா, சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபற்றினர்.

திருச்சி டைகர்ஸ் vs சென்னை சிங்கம்ஸ்' அணியினர் மோதிய முதல் போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணியினர் வென்றனர். 

அதனைத் தொடர்ந்து, 'கோவைகிங்ஸ்' vs 'ராம்நாடு ரைனோஸ்' அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் ராம்நாடு ரைனோஸ் அணியினர் வென்றனர். 

மதுரை காளைஸ் vs சேலம் சீட்டாஸ் அணியினர் மோதிய மூன்றாவது போட்டியில்,  சேலம் சீட்டாஸ் அணியினர் வென்றனர்.  

நெல்லை டிராகன்ஸ் vs தஞ்சை வாரியர்ஸ் அணியினர் மோதிய நான்காவது ஆட்டத்தில் தஞ்சை வாரியர்ஸ் அணியினர் வெற்றிப் பெற்றனர்.   இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணியினர், சேலம் சீட்டாஸ் அணியினரை எதிர்கொண்டனர். இதில் சென்னை சிங்கம்ஸ் அணியினர் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தஞ்சை வாரியர்ஸ் அணியினரும், ராம்நாடு ரைனோஸ் அணியினரும் மோதினர். இதில் தஞ்சை வாரியர்ஸ் அணியினர் வெற்றிப் பெற்று இறுதி பாட்டிக்குள் நுழைந்தனர். இறதிப் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணியினர், ஜீவா தலைமையிலான தஞ்சை வாரியர்ஸ் அணியினர் நிர்ணயித்த 84 ரன்களை ஐந்து ஓவர்களிலேயே வெற்றி இலக்கை தொட்டு கோப்பையை வென்றனர். 

நிகழ்ச்சியின் முடிவில், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துப் பேசுகையில், “நாங்கள் இந்த நிகழ்ச்சியை துவங்கும் பொழுது நிறைய கேள்விகளை எதிர்கொண்டோம். அதையெல்லாம் மீறி இன்று இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அதற்கு நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கியமாக நடிகர் ரமணா வின் யோசனை தான் இந்தப் போட்டிக்கான தொடக்கம். அதற்காக அவருக்கு எங்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார்,உலக நாயகன் கமலஹாசன் சார், விக்ரம் சார்,மம்முட்டி சார்,பாலகிருஷ்ணா சார்,வெங்கடேஷ் சார், சுதீப் சார், சிவராஜ்குமார் சார்,திரையுலகின் மூத்த நட்சத்திரங்கள்,மற்றும் எட்டு அணிகளின் கேப்டன்கள்,ஸ்பான்சர்கள், அனைத்து PRO க்கள், புரொடக்‌ஷன் மேனேஜர்கள், FEFSI, ஐசரி கணேஷ் சார், டான்சர்ஸ்,பாரம்பரிய இசைக்கலைஞர்கள், சென்னை கார்ப்ரேஷன்,காவல்துறை, எல்லாவற்றிற்கும் மேலாக  ரசிகர்கள்,இவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். சன் ரி வி நிறுவனத்திற்கு எங்களது நன்றி.  உங்கள் அனைவரது ஆசிகளுடன் நடிகர் சங்க கட்டடத்தினை சிறப்பாகக் கட்டுவோம் என உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இவ்விழாவின் போது நடிகர் சீயான் விக்ரமின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் போது பேசிய விக்ரம், ‘எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும்,எனது ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.  நான் ரசிக்கும் நடிகர்களுக்கு ரசிகனாகத் தான்,நான் இங்கே வந்திருக்கிறேன். இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று பேசினார். 

தகவல் : சென்னை அலுவலகம்