நெஞ்சுக்குழியில் வலி, பசியற்ற உணர்வு, வயிறு உப்பிவிட்டதுபோல் தோன்றுதல், வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு, ஜீரணத்தில் கோளாறு போன்ற உணர்வு, வாந்தி, வயிற்றுப்புண், வயிற்றில் பந்து உருளுவது போல் போன்ற எண்ணம், பெருங்குடலில் அடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அல்லது தோன்றினாலோ உடனடியாக அருகிலுள்ள மருத்துவர்களை சந்தித்து, பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரைப்பை புற்றுநோய் இல்லையென்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இரைப்பை புற்றுநோயா... என ஆச்சரியப்படவேண்டாம்.

சாதாரண வயிற்று வலி போல் தொடங்கி, இரைப்பை புண்ணாக மாறி, அதனையும் கடந்து நாள்பட்ட புண்ணாகத் தொடர்ந்து கவனிக்கப் படாமல் இருந்தால் அது இரைப்பை புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உண்டு.

உலோகத்தொழிலில் ஈடுபடுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள்,அஸ்பெஸ்டாஸ் கூரை உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் ஆகியோர்களுக்கு இரைப்பை புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இவர்கள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதே போல் மாவு சத்து அதிகம் கொண்ட உருளைக்கிழங்கை அல்லது மாவு சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருள்களை அதிகமாக சாப் பிடுவதாலும் இரைப்பைப்புற்றுநோய் வரக் கூடும்.

ஒரு சிலருக்கு ஹைச்=பைலோரி என்ற வைரஸ் கிருமியின் தாக்குதலாலும் கூட இரைப்பையில் புற்று நோய் ஏற்படக்கூடும். பொதுவாக நாற்பத்தைந்து வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரைப்பையில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் அமிலத்தின் வீரியம் குறைந்துவிடுவதால், இரைப்பையின் சவ்வுப்படலத்தில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ தொடங்கிவிடுகின்றன. இதனால் இரைப்பைக்குள் வரும் உணவோடு இந்த பாக்டீரியாக்கள் எதிர்வினைப் புரிந்து புற்றுநோயை தோற்றுவிக்கக்கூடிய வேதிப் பொருளாக உணவினை மாற்றிவிடும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள நைட்ரேட்டை இரைப்பையிலுள்ள ரிக்டோஸ் என்ற நொதிப் பொருள் ரைட்ரேட்டாக மாற்றுகிறது. இந்த நொதிப்பொருள் குறைந்து போவதாலும் கூட இரைப்பைப் புற்றுநோய் உருவாகும்.

அதே சமயத்தில் ஒரு சிலருக்கு வயிற்றில் பெரிய அளவில் சத்திர சிகிச்சை செய் திருந்தாலும் கூட பக்கவிளைவாக இரைப்பை புற்றுநோய் உருவாக வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக கேஸ்ட்ரோ ஜுஜுனாஸ்டோமி என்ற சத்திர சிகிச்சையை செய்யும் பொழுது, இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் இடையில் இணைப்புக் குழாய் பொருத்துவார்கள். இதனால் சிறுகுடலில் இருக்கும் பித்தம் சிறிது நேரம் இரைப்பையின் சுவரில் தங்கி இருந்து பிறகு தான் வெளியேற்றப்படும். அப்படி தங்கியிருக்கும் போது இந்த பித்தமானது இரைப்பையின் உள்சுவரின் சவ்வுப் படலத்தில் திரும்ப திரும்பப் பட்டு அங்கிருக்கும் மியூகோஸாவைப் புற்று நோயாக மாற்றிவிடுகிறது. இதனால் தான் இரைப்பையில் பெரிய அளவிலான சத்திர சிகிச்சைகள் மேற்கொண்ட பின்னர் மூன்று மாத கால அளவிற்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலி யுறுத்துகின்றனர்.

வேறு சிலருக்கு இரைப்பையின் உள் சுவரிலுள்ள பொலிப்ஸ் எனப்படும் குடல் நீட்சிகள் புற்று நோயாக மாறி விடும். அதே போல் மெனிட்ரியர் எனப்படும் நோய் தாக்கினால், இரைப் பையிலுள்ள உள்சுவரைத் தடித்து போகச்செய்துவிடும். இதனால் கூட இரைப்பை புற்றுநோய் வரக்கூடும்.

மேலும் ஏ இரத்த வகை உள்ள வர்களுக்கு இந்த அணுவின் கார்போஹைட்ரேட் தொடர் சங்கிலி இருப்பதால் இரைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.இது போல பல காரணங்களை நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேப் போக லாம்.

இருப்பினும் மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவ நிபுணர்களைச் சந்தித்து ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு என்ன சிக்கல் என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

இதன் மூலம் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து முழுமையான கூட்டு சிகிச்சை மூலம் குணப்படுத்திட இயலும்.

டாக்டர். எம். குணசேகரன்

தொகுப்பு: அனுஷா