களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரின் பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பகுதியில் சேவையாற்றி வந்த கிராம சேவை உத்தியோகஸ்தர் எஸ்.விக்னேஸ்வரன் (33) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் இவரை வழிமறித்த சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியள்ளனர்.

இவர் சடலமாக மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளபோதிலும் சட்ட வைத்திய அதிகாரிகள் இன்மையால் பிரேத பரிசோதனை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நாளை பிரேத பரிசோதணை நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, படுகாயமடைந்த அ.பிரகலாதன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந் நிலையில் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இக் கிராம சேவை உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர். இது தொடர்பில் புலனாய்வு பொலிஸாரின் உதவியுடன் பொது மக்களின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மேற்படி இரு நபர்களும், மின் கம்பத்தில் மோதியதாலே கிராம சேவகர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் ஏற்கனவே இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களின் உடலில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காயங்கள் காணப்படுவதால் இவரின் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் புலனாய்வு பிரிவின் உதவியுடன் விரிவான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைக் கண்டறியும் பொருட்டு சோகோ பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.