(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

எமது ஆட்சியில் 840 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியில் உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை வெறும் நீச்சல் தடாகம் என விமர்சித்த பிரதமர்  அதே துறைமுகத்தை 1.2 பில்லியனுக்கு விற்றுள்ளார். வாங்கிய கடனை விடவும் அதிக பெறுமதிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டுள்ளது. ஆகவே எமது அரசாங்கம் பெற்ற கடனை செலுத்த வேண்டியதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள் கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

எமது நாட்டின் அபிவிருத்திகள் அனைத்துமே துறைமுகங்களை சார்ந்தே உள்ளது. சிங்கபூர் துபாய் போன்ற நாடுகள் வளர்ச்சியடைய துறைமுகங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டமையே காரணமாகும். 

அதனை உணர்ந்தே எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை துறைமுகத்தை புனரமைத்தார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.