ஜப்பானில் இருதினங்களாக தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் நிலநடுக்கம் தாக்கலாம் என்ற அச்சத்தில் பலர் வீடுகளுக்கு செல்லாமல் வீதியோரமாக காருக்குள்ளேயே படுத்து தூங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஜப்பானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்து, சுமார் 650 பேர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூ பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 அலகுகளாக பதிவானது.

மிகமோசமான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல அடுக்குமாடி வீடுகளும், தனி வீடுகளும் இடிந்து விழுந்தன. சாலைகளில் பிளவு ஏற்பட்டு, பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நேற்றைய நிலநடுக்கத்தால் கியூ தீவுக்கு அருகாமையில் உள்ள ஒரு எரிமலை வெடித்து, தீப்பிழம்பை கக்கி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 19 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் பலரை உயிருடன் மீட்கும் முயற்சியில் பேரிடர் நிவாரணம் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்த சுமார் 800 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளாட்சிதுறை சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை இவ்விரு நிலநடுக்கங்களிலும் 41 பேர் பலியானதாகவும், சுமார் 1500 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குமாமாட்டோ நகரில் மட்டும் 32 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், சுமார் 200 வீடுகள் தரைமட்டமாகி கிடப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நகரில் சுமார் 4 இலட்சம் வீடுகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுவதாகவும், சுமார் ஒருலட்சம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கி கிடப்பதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், மீண்டும் நிலநடுக்கம் தாக்கலாம் என்ற அச்சத்தில் பலர் வீடுகளுக்கு செல்லாமல், குடும்பத்தாருடன் வீதியோரமாக காருக்குள்ளேயே படுத்து தூங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.