பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கைக்கு சீனா முற்றுப்புள்ளி வைத்ததன் எதிரொலியாக அங்கு இளம் வயதினர் திருமணம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் சட்டபூர்வமான திருமண வயது என்பது ஆண்களுக்கு 22 வயதும் பெண்களுக்கு 20 வயதுமாகும். ஆனால், தென்பகுதி சீனாவிலுள்ள மக்கள், இந்த சட்டத்தை கண்டுகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, பெரும்பாலானோர் சிறு வயதிலேயே திருமணத்தை முடித்துக்கொண்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்கின்றனர்.

பெருவாரியான குடும்பங்களிலும் இளவயது பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தங்களது வயதான பெற்றோரிடம் ஒப்படைத்துக்கொண்டு வேலை நிமித்தம் வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். பாடசாலைப்பருவத்திலேயே திருமணம் செய்துகொள்வதாலும், போதிய விழிப்புணர்வு ஏற்படும் முன்னரே தாய்மை அடைய நேரிடுவதாலும் பெருவாரியான பெண்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் உள்ளனர்.

சில குடும்பங்களில் வருவாய் தேடிக்கொள்ளாத இளம்வயது தம்பதியினருக்கு அவர்களின் அன்றாட தேவைக்கான பணத்தை அவர்களது பெற்றோரே தங்களது மாதவருவாயில் இருந்து பகிர்ந்து வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் ஆண் -பெண் பாலின விகிதாசாரத்தில் கடுமையான சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு பிடித்த ஜோடியை தேடிக்கொள்வது மிகவும் கடினமான பணியாக இளைஞர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, மிக குறைவான வயதிலேயே, இளைஞர்கள் தங்களுக்கான துணையை வெகு சீக்கிரத்தில் தேடிக்கொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் 13 வயதிலேயே தாய்மையடையும் நிலைக்கு பெரும்பாலான இளம்வயது பெண்கள் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.