“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்டத்திற்கான செயற்திட்டத்தின் நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை (22) புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

அதன் முதலாவது மாவட்ட மட்ட செயற்திட்டம் கடந்த 18ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமானதுடன், புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் 332 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் அப்பிரதேச மக்களின் கல்விப் பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்பட்டன.

அதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போதைபொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய்த்தடுப்பு, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.

நீண்டகாலமாக மக்கள் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை வழங்கி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டம் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளன.

நாளைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ள புத்தளம் மாவட்டநிறைவு  விழாவையொட்டி புத்தளம் புதிய நகரசபை விளையாட்டு மைதானம், புதிய நகர மண்டபம், புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கணனி பிரிவு ஆகியனவும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளன.