மேலதிக வகுப்புக்களுக்கு செல்ல வசதியில்லாத ஏழை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பாடசாலை ஆசிரியரை, மாணவ – மாணவிகள் மனதார பாராட்டுகின்றனர். 

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றுபவர் பரமேஸ்வரன். இவர், 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவிகளுக்கு தமிழ் கல்வி கற்பித்து  வருகிறார். அத்துடன் இவர், பாடசாலை முடிந்ததும் அந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவ – மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாடம் நடத்துகிறார்.

இதுபற்றி ஆசிரியர் பரமேஸ்வரன் கூறும்போது, “எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேச்சேரி. வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக அஞ்சல் வழி கல்வியிலேயே எம்.ஏ படித்து முடித்தேன். அதன்பின்னர் மேலும் படித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனேன்.

நான் பணிபுரியும் குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், குட்டை முனியப்பன் கோவில், ஏமம்பாளையம், சேவண்டியூர், கண்ணாங்கரடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த 51 மாணவர்கள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்ல வசதியில்லாத ஏழை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் சொல்லித் தருகிறேன். அத்துடன், மின்விளக்கு வசதி இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களை ஒரு பொதுவான இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே வைத்து பாடம் நடத்துகிறேன்” என்றார்.

“ஆசிரியர் பரமேஸ்வரன் எங்கள் மீது அக்கறை கொண்டு வீட்டுக்கே வந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இதனால் எங்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது” என்று அந்தப் பகுதி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.