(க.கிஷாந்தன்)

புதுவருடதினத்தன்று நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த நபரொருவர் போதையில் தவறி விழுந்து சுயநினைவையிழந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த முச்சக்கரவண்டி விபத்திற்குள்ளானதில் சுயநினைவிழந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புதுவருடத்தை கொண்டாடும் வகையில் நண்பர்களுடன் இணைந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்கருகில் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், நண்பர்களிலொருவர்  போதையில் தவறி வீழ்ந்து சுயநினைவை இழந்துள்ளார்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற முச்சக்கரவண்டி வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சுயநினைவை இழந்த  நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியின் கலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட – மல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய எம்.டபிள்யூ.டீ குமாரபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.