(க.கிஷாந்தன்)

கொழும்பு ஜாஎல பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய சிறிய ரக லொறி ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் தாய், தந்தை, மகன் மூவரும் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த லொறி அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் வீதியை விட்டு விலகி கற்பாறை ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ஜாஎல பகுதியின் உறவினர்களின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கொட்டகலையில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவரில் இரண்டு பேரை மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.