தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உணவு தயாரித்த உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் பொலிஸாரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகளினால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டன. 

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி உட்பட பல வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இடங்களை வைத்திருந்த மற்றும் உணவுப்பொருட்களை தயாரித்த 5 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத்தாக்கல செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதபாலன் தெரிவித்தார். 

இத்திடீர் சுற்றிவளைப்பின்போது 10க்கும் அதிகமான உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், ஹோட்டல்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. 

சில உணவகங்களை மூடுமாறும் உத்தரவிடப்பட்டதுடன் ஒருவாரகாலத்தினுள் தூய்மைப்படுத்தி சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டபின் திறக்குமாறும் உத்தரவிடப்பட்டது. 

- ஜவ்பர்கான்