(ப. பன்னீர்செல்வம்)

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையத்தை இயங்கச் செய்வதற்கும் இவ்விஜயம் உந்து சக்தியாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெலிஓயாவில்  நடைபெற்ற “இசுறுபுர” கிராம வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும்   நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே யே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறியுள்ளார்.  

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

பிரதமர் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயமானது வெற்றிகரமான ராஜதந்திர விஜயமாகும். கடந்த காலங்களில் அரச தலைவர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் பிரயோசனமற்ற பயணங்களாகவே அமைந்திருந்தன.

இவ் விஜயம் ஒவ்வொரு தருணமும் நாட்டின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டது. சீனாவிடமிருந்து பல கோடி ரூபா எமக்கு நிதியுதவி கிடைத்தது.

கடந்த காலங்களில் புராதனச் சின்னங்களாக காட்சியளித்த பாரிய அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் மீள ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் மூலம் வருமானத்தை பெறும் விதத்திலான திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சீனாவின் முதலீட்டாளர்களை  சந்தித்து பிரதமர் நடத்திய கலந்துரையாடல்கள் மூலம் பெரும்தொகையான முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இங்கு முதலீடுகளை மேற்கொள்ள தயாராகியுள்ளனர்.