கால்களை இழந்த நாய்க்குட்டிக்கு சக்கரம் கொடுத்த இளைஞர்

Published By: Digital Desk 4

27 Feb, 2019 | 06:44 PM
image

விபத்தில் சிக்கிய நாய்க் குட்டியை மீட்டு சிகிச்சை அளித்ததுடன், கால்களை இழந்த அதை தனது யோசனையால் நடமாட வைத்த பொறியியளாலர் ஒருவரின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின்  புதுச்சேரி ரயில் நிலையம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. இந்நிலையில் ஒருநாள், அந்த நாய் தனது குட்டிகளுடன் சாலையை கடந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தாய் நாய் இறந்தது. அதன் குட்டிகளில் ஒன்று 2 பின்னங்கால்களும் அடிபட்டு நடக்க முடியாமல் சாலையோரம் கிடந்தது.

அப்போது, அந்த வழியாகச் சென்ற புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரைச் சேர்ந்த சிவில் பொறியியளாலர் அசோக்ராஜ் என்பவர், நாய்க்குட்டியின் முனகல் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். அது விபத்தில் சிக்கி கால்களை இழந்திருப்பது அவருக்கு தெரியவந்தது. அந்த நாயைப் பார்த்து வேதனை அடைந்த அவர், அதை கால்நடை வைத்தியரிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாய் உயிர் பிழைத்தது. ஆனாலும், 2 பின்னங்கால்களையும் இழந்து நடமாட முடியாத நிலையில் தொடர்ந்து தவித்தது. இதனால் உடலை தரையில் போட்டு இழுத்து அந்த நாய் நகர்ந்து வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. நாயின் நிலையை பார்த்து வேதனை அடைந்த அசோக் ராஜுக்கு ‘கால்களை இழந்த அந்த நாய்க்கு வண்டி செய்தால் என்ன என்று ஒரு யோசனை பிறந்தது. 

இதையடுத்து, தனது வீட்டில் உள்ள பழைய பிளாஸ்டிக் பைப் மற்றும் சக்கரங்களை பயன்படுத்தி இழுவை வண்டி போன்று ஒன்றை உருவாக்கினார். அந்த வண்டியை, நாய் நடமாடிச் செல்லும் வகையில் அதன் உடலில் பொருத்தி ஓடவிட்டுப் பார்த்தபோது, அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. மற்ற நாய்களைப்போல் இல்லாவிட்டாலும், இந்த வண்டியால் அந்த நாய் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு அசோக்ராஜ் திருப்தி அடைந்தார். அந்த நாயை தனது வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறார்.

மனிதர்களிடம் மனிதாபிமானம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், விபத்தில் சிக்கிய தெரு நாயை மீட்டு சிகிச்சை அளித்ததுடன், கால்களை இழந்த அதை தனது யோசனையால் நடமாட வைத்த பொறியியளாலர் அசோக்ராஜ் பாராட்டப்பட வேண்டியவரே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right