அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்  ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உன் இருவரும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. 

எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.

இதற்கு தீர்வுகாண 2 ஆவது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம்யொங் உன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர். 

அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த  மாதம் 27, 28 ஆகிய திகதிகளில் வியட்நாமின் ஹனோய் நகரில் இடம்பெறவுள்ளது.  

இந்த நிலையில், டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் பியாங்யாங் நகரில் இருந்து 4,500 கி.மீட்டர் தூரம் சுமார் 60 மணி நேரம் ரயிலில் மூலாக பயணம் மேற்கொண்டு வியட்நாமின் எல்லையோர நகரம் டாங் டாங்கை சென்றடைகிறார். 

அங்கிருந்து கார் மூலம், மாநாடு நடைபெறும் ஹனோய் செல்கிறார்.  கிம்யொங் உன்னுடன் அவரது சகோதரி கிம் யோ யொங், உதவியாளர் கிம் யொங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.