தூய்மையான அரச நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது ;  ஜனாதிபதி 

Published By: Digital Desk 4

21 Feb, 2019 | 10:34 PM
image

தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

19வது திருத்தத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் பொறுப்புக்கள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அவற்றில் எந்தவொரு விடயமும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி தான் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மிகவும் பிழையாக வியாக்கியானங்கள் செய்யப்பட்டு விமர்சிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர்கள் தொடர்பில் தனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தனக்குள்ள பிரச்சினை தன்னால் அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட நீதியரசர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதே ஆகும் என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

நீதியரசர் ஒருவரின் பெயர் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்படுமானால்அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு அந்த நீதியரசர்களுக்கு உரிமையுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தனது பதவி உயர்வை இழக்கின்ற சந்தர்ப்பத்தில் தொழிலாளி ஒருவருக்கு கூட அது பற்றி கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அந்த நீதியரசர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனத்தை கருத்திற் கொண்டும் பதவி உயர்வை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு நியாயமானதும் பக்கசார்பற்றதுமான முறைமையொன்றை ஏற்படுத்தும் நோக்குடனேயே தான் அந்த தலையீட்டை செய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி , பிரச்சினையை தனக்கு எதிராகவே திருப்பி தன்னைப் பற்றிய பிழையானதொரு விம்பத்தை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்திற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிப்பது நீதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடம்பெறுமானால் அதற்காக பெயர்களை முன்வைக்கும் ஜனாதிபதிக்கு அது பற்றி அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது என்றபோதும் இதுவரையில் அந்த பெயர்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார். 

மேலும் அரசியலமைப்பு சபையிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது பற்றி எந்தவொரு விடயமும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இன்று அரசியலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசியலமைப்புச் சபையை நடைமுறைப்படுத்தும் போது ஒரு போதும் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படுத்தப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.

19வது திருத்தத்தின் ஊடாக உருவானவையே சுயாதீன ஆணைக் குழுக்களாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அது பிழையான வழியில் செல்லுமானால்  நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கும் சமூகம் விரும்பும் நோக்கங்களை அடைந்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

உலகின் எந்தவொரு தலைவரும் மேற்கொள்ளாத வகையில் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தனது அதிகாரத்தை தானம் செய்த இந்த யுகத்தின் ஒரே தலைவர் நானாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தான் அவ்வாறு செய்தது சிறந்ததோர் அரச நிருவாகத்தை உருவாக்கும் தூய்மையான நோக்கத்திற்காகவேயாகும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்வது பற்றிய பாராளுமன்றத்தின் தீர்மானம் எதுவானாலும் அன்று போல் இன்றும் தான் அதற்கு உடன்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38