காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பையில் இருந்து நீக்கவேண்டுமென  பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

 காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த திகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை இராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். 

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர். 

இங்கிலாந்தில் நடக்க உள்ள 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16 திகதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர்.உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது. 

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதுமாறு பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியை,  நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  

பாகிஸ்தான் உடன் எந்தஒரு போட்டியையும் விளையாடும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஐ.சி.சி கூட்டம் வருகிற 27ம் திகதி முதல் மார்ச் 2ம் திகதி வரை டுபாயில் நடக்கிறது.இக் கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.