(ஆர்.யசி)

நாட்டை பாதுகாக்கும் அளவுக்கு ஒரு தனி நபருக்கான பாதுகாப்பு அவசியமில்லை. நாட்டில் அச்சுறுத்தல் இல்லாத நிலையில் மக்கள் மத்தியில் பயமும் அச்சமும் இல்லாத நிலையில் அநாவசியமாக பாதுகாப்பு விடயங்களில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இது மஹிந்த ராஜபக்ஷ விடயத்திலும் பொருந்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படுவது தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தை வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

நாட்டின் தலைவர்கள், தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மக்களுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் மாத்திரம் பேசுவது தான் இன்று பிரச்சினையாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என அவரின் தரப்பில் கூறுகின்றனர். அவ்வாறு இல்லையென அரசாங்கம் கூறுகின்றது. உண்மையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாதுகாப்பு அவசியமா அல்லது குறைக்கப்படுவது நல்லதா என்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பே தீர்மானம் எடுக்க வேண்டும்.