(எஸ்.ரவிசான்) 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பொலிஸ் சேவைகள் உட்பட நகர பகுதிகளில் புதிய போக்குவரத்து முறையை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மேலும் இதற்கான முதற் கட்டமாக நாளை முதல் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிங்கள - தமிழ் மக்களால் கொண்டாடப்படும் சித்திரை பண்டிகையானது நெருங்கி வரும் நிலையில் 'பாதுகாபான முறையில் பண்டிகையினை கொண்டாடுவோம்' எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவுப்படுத்தும் செயற்றிட்ட செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை சுகாதார கல்வி பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.