அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் முடிவுகளில் முன்னணி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவரும் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளில் பலரும் போட்டியிடுகின்றனர். 

ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அடுத்ததாகவுள்ள டெட் குரூஸ் அவரை வேகமாக நெருங்கி வருகிறார். இதனால், டிரம்புக்கு நெருக்கடி ஏற்படும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், வெளியாகியுள்ள விஸ்கான்சின் மாகாண தேர்தல் முடிவுகளில் டொனால்ட் டிரம்பை பின்னுக்குத் தள்ளி டெட் குரூஸ் வெற்றி பெற்றார். குருஸுக்கு 48 வீத வாக்குகளும், டிரம்புக்கு 34 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. அதுபோல, 43வீத வாக்குகள் பெற்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் ஹிலாரி. அவரைப் பின்பற்றிவரும் பெர்னி சாண்டர்ஸ் 56 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 

கடந்த சில வாரங்களில் ஹிலாரியை எதிர்த்து அவருக்கு கிடைத்துள்ள 6 ஆவது வெற்றியாகும். அடுத்து நடைபெறும் தேர்தல்களில், இந்த நிலை நீடித்தால் ஜனாதிபதி வேட்பாளர் ஆவது உறுதி எனும் நம்பிக்கையில் சாண்டர்ஸ் உள்ளார்.

டிரம்ப்புக்கு தற்போது 740 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. அவரை வேகமாக நெருங்கி வரும் குருஸுக்கு 514 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. 

இந்த மாத இறுதிக்குள் முதல்கட்ட தேர்தல் முடிவுக்கு வந்துவிடும். எனவே, குரூஸ் முன்னேறி வருவதைத் தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு தேவைப்படும் 1,237 உறுப்பினர் வாக்குகள் டிரம்ப்புக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஆனால், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி என டிரம்ப் உறுதியாக நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.