KP

பௌத்த குருமாரை கொலை செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவியும் நாட்டை அழித்த கே.பி.க்கு பிரபுத்துவ சிறப்புரிமையும் மஹிந்த ராஜபக் ஷசவின் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது. இதனை எதிர்க்காது மௌனம் காத்தவர்கள் இன்று தமது அரசியல் இருப்பிற்காக இனவாதத்தை நாட்டுக்குள் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டிய சபை முதல்வரும் அமைச்சரமான லக் ஷ்மன் கிரியெல்ல, வழக்கும் இல்லாமற் சாட்சியங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களையே அரசு விடுதலை செய்தது. நாம் எதைச் செய்தாலும் இலங்கையின் அரசியலைமைப்பிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், 

‘உலகின் மத்தியில் இலங்கையை தனிமைப்படுத்தும்' நடவடிக்கைகளையே முன்னெடுத்தார்.

இந்தியா, அமெரிக்கா போன்ற உலகின் பொருளாதார அபிவிருத்தி கொண்ட வல்லரசு நாடுகள் எமது நாட்டுடன் கடந்த காலங்களில் ராஜதந்திர நட்புறவை பேணவில்லை.

மாறாக கடந்த ஆட்சியின் பிழையான வெளிநாட்டுக் கொள்கைகளால் உலகிலிருந்து எமது நாடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இணக்கப்பாட்டு நல்லாட்சியில் உலக நாடுகளுடன் சுமுகமான ராஜதந்திர நட்புறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அந்நாடுகள் எமது நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன் வந்துள்ளன.

தமிழ் இளைஞர்கள் பெரும்பாலானோர் 10 – 20 வருடங்களுக்கு மேலாக அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் சாட்சியங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படலாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களே பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். 

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெறப்பட்டு சட்ட ரீதியான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை, இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரமே அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. அதனை மீறி எதனையும் நாம் முன்னெடுப்பதும் இல்லை தீர்மானிப்பதும் இல்லை.

தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் கேள்வி கேட்பவர்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அரந்தலாவையில் பௌத்த குருமாரை கொலை செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்து பதவி கொடுத்து பாதுகாத்தனர்.

அதேபோன்று இலங்கையை அழிப்பதற்கு வெளிநாடுகளில் பணம், ஆயுதம் சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய பிரபாகரனுக்கு பின்னர் புலிகளின் தலைவரான கே.பி. க்கு பிரபுத்துவ சிறப்புரிமைகளை வழங்கி பாதுகாத்தது.

அன்று மஹிந்தவின் ஆட்சியில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள் மௌனமாக இருந்தனர்.

இன்று இவர்கள் ‘அரசியல் முகவரிகளை' இழந்துள்ளனர். எனவே அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டில் இனவாதத்தினை தூண்டுகின்றனர்.

நாட்டு மக்கள் இனியும் இவர்களது இனவாதத்திற்கு பலிக்கடாவாக மாட்டார்கள். அந்தளவிற்கு எம் நாட்டு மக்கள் மடையர்கள் அல்ல. 

புலம்பெயர் தமிழர்களும் இலங்கையில் பிறந்தவர்களே அவர்கள் அனைவரும் புலிகள் அல்ல.

அத்தோடு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சிங்கள மக்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கு தயாராகியுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள சம்பந்தன் இன்று தென்பகுதி பிரச்சினைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதேபோன்று புலம்பெயர் தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் பெரும்வாரியாக தனி நாடு என்ற கோட்பாட்டிலிருந்து மீட்சி  பெற்றுள்ளது.

எனவே அவர்கள் இலங்கைக்கு வர வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகளாக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இனங்களிடையேயான  நல்லிணக்கம் வலுப்பெற வேண்டும். இதுவே அரசின் இலக்காகும்.

ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு அரசியல் முகவரியை தக்க வைத்துக் கொண்ட சிலரும், அரசியல் முகவரியை தொலைத்தவர்களும் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு தமது  தலைவரின் கொள்கைக்கு எதிராக செயற்பட்ட அரசியல் குளிர்காய முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.