கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தர்ணா போராட்டத்தை நடத்தி வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் நேரில் வரவில்லை என்றாலும், தொலைபேசியில் உறுதியளித்தால் போராட்டத்தை மீளப்பெறுவது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,

“ ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள்முதல் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். முதியோர் ஓய்வூதியத் தொகை, இலவச அரிசி, விவசாயிகளுக்கான கடன் இரத்து என மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.

காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். இதற்கு பிரதமர் மோடியும் ஆதரவாக உள்ளார் இந்நிலையில், புதுவையில் பிரதமர் மோடிக்கு ஒரு தம்பி உள்ளார். அவர்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. அவர் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்க முடியாததற்கு கூட குரல் கொடுக்காதவர்.

  பிரதமர் மோடி, ஆளுநர் கிரண்பேடி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி ஆகியோர் சேர்ந்து கூட்டு சதி செய்கின்றனர். மாநில வளர்ச்சியும், மக்கள் நலனும்தான் எங்களுக்கு முக்கியம். இதற்காகத்தான் குறித்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

மூன்றாவது நாளாக குறித்த போராட்டம் தொடர்கிறது. ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிரண்பேடி தாமதப்படுத்துகிறார்.

எங்களின் போராட்டம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அறவழியில் தொடர்கிறது. எங்களின் கூட்டணி கட்சிகள், ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் இங்கே வந்துதான் உறுதி சொல்ல வேண்டும் என்பது இல்லை. தொலைபேசியில் உறுதி அளித்தால் கூட எங்கள் போராட்டத்தை மீளப்பெறுவது குறித்து பரிசீலிப்போம்.” என்றார்.