11.17 கோடி ரூபாய்க்கு ஏலம் போன தலைமுடி..!

Published By: Digital Desk 4

09 Feb, 2019 | 01:24 PM
image

=இந்தியாவில் ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் திருக்கோயிலில் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 900 கிலோ தலைமுடியை ஏலம் விட்டதில், 11 கோடியே 17 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் திருக்கோயிலில் உள்ளது. இங்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அப்படி வரும் பக்தர்களில் பலர், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இதன்படி, சாதாரண நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, 2 பிரதான ‘கல்யாண கட்டா’, 12 மினி ’கல்யாண கட்டா’ எனும் இடங்கள் தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வருகிறது. இதில், நிரந்தரம், ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீவாரி சேவகர்கள் என 3 பிரிவுகளாக சவரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கல்யாண கட்டாகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் காணிக்கை தலைமுடி அனைத்தும், மூட்டைகளில் கட்டி திருமலையில் இருந்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு, அந்த முடியை சுத்தம் செய்து நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து, இ-டெண்டர் மூலம் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகிறது. 

இதன்படி, “இந்த மாதத்தின் முதல் வியாழக்கிழமையான கடந்த 7ஆம் திகதி காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. மொத்தம், ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. 

அதில், 1 இலட்சத்து 43 ஆயிரத்து 900 கிலோ தலைமுடி ஏலம் போனது. இதன்மூலம், ஏழுமலையான் திருக்கோயிலுக்கு 11 கோடியே 17 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது” என்று, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right