போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற குடும்பம் உருவாக வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்ற தொனிப் பொருளிலான தேசிய போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்டம் குருநாகலையை மையப்படுத்தி மாளிகாபிட்டிய மைதானத்தில் ஜனாதிபதியால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,

போதைபொருள் தடுப்பு தொடர்பாக ஈடுபடும் விசாரணைகளை நடத்தும் விசேட சுற்றிவலைப்புக்களை மேற்கொள்ளும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டமொன்று இவ்வருடம் தொடக்கம் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு அவ் அதிகாரிகளின் பதவியுயர்வுகள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

உலகையே நெருக்கடிக்குள் தள்ளியுள்ள போதைபொருள் கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பது தொடர்பில் அனைவரது கவனமும் தேவைப்படுகின்றது.

போதையிலிருந்து சுதந்திரமடைந்த நாடொன்றை உருவாக்க வேண்டுமானால் முதலில் போதையற்ற குடும்பத்தை உருவாக்க வேண்டும். அனைத்து குடும்பங்களும் போதையிலிருந்து விடுபடும் போது போதையற்ற கிராமம் உருவாகும். அதன் பின்னர் போதையிலிருந்து விடுபட்ட நாடு உருவாகும்.

இத் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அதிக கடப்பாடு உள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச இணைப்பாளர்கள் குழுக் கூட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் போதைதடுப்பு நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதை தடுப்பு திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.