சுதந்திரதினமும் சுதந்திரமற்று வாழும் மலையகத்தவர்களும்

Published By: Priyatharshan

04 Feb, 2019 | 11:43 AM
image

- எம்.டி. லூசியஸ்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாப்படுகின்றது. 400 வருட காலனித்துவ ஆட்சியில் இருந்து எமது தாய்நாடு விடுபட்டு விட்டது என சந்தோசமாக கொண்டாடுமளவுக்கு தமிழ் மக்களிடத்தில் அந்த பேரார்வம் இன்னமும் ஏற்படவில்லை என்பதே உண்மை. இதனையும் யாரும் வெளிப்படையாக மறுப்பதற்கும் இயலாது. அதிலும் குறிப்பாக மலையக மக்களின் வாழ்க்கையை நினைத்து பார்க்கும் போது, இரத்த கண்ணீர் வடிக்கும் நிலைமையே இன்று உருவாகியுள்ளது. என்ன தான் நாடு சுதந்திரமடைந்து 71 ஆண்டுகளை கடந்துள்ளபோதிலும் அந்த பெருந்தோட்ட மக்களின் வாழ்வில், காலசுழற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்.

காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை விடுப்பட்டு தமக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்கி ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துள்ள போதும், மலையக மக்கள் அந்த சுதந்திர காற்றை சுவாசிக்கும் அடிமைகளாகவே இருந்து வருகின்றனர். காரணம் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்காமல் காலம் காலமாக இந்த ஆட்சியாளர்களால் மறுக்கப்பட்டு வந்துள்ளன.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட போதிலும் இலங்கையில் வாழும் ஏனைய இன மக்களின் வாழ்கையுடன் ஒப்பிடும் போது அந்த மக்களின் வாழ்க்கை சம அந்தஸ்து இன்றியே காணப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்ட இந்த மக்கள், தமக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கௌரவாமாக வாழ்ந்தாலும் கூட இலங்கை அரசாங்கத்தால் இம்மக்கள் இன்னமும் இரண்டாம் தர பிரஜைகளாகவே வழிநடத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.

இதற்கு அப்பால் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை  தற்போது அனைவரினதும் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் இவ்விடயத்தில் மக்கள் திருப்தியடையுமளவுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் பாராமுகமாகவே செயற்பட்டுள்ளனர்.

நபர் ஒருவர் சமூகத்தில் அந்தஸ்த்துடன் வாழவேண்டுமென்றால் அவரின் தனிப்பட்ட வருமானம் அதில் முக்கிய செல்வாக்கை செலுத்துகின்றது. அந்த வகையில் இலங்கையில் அனைத்து இன மக்களும் தாம் அந்தஸ்த்துடன் வாழுமளவுக்கு வருமானத்தை பெறுகின்றபோதும் பெருந்தோட்ட மக்கள் அவ்விடயத்தில் இன்னமும் எங்கோர் புள்ளியில் நிற்கின்றனர்.  

இலங்கையில் மாத்திரமல்ல உலகளவில் பார்த்தாலும் கூட மலையக மக்கள் பெறும் ஊதிய தொகையை போன்று எந்த நபரும் பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே தான் பெருமளவான மக்கள் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்று அங்கேயே செத்து மடியும் துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.  ஆனால் இந்த மக்கள் இந்த சிறிய வருமானத்தை வைத்தே வாழ்க்கையை பல சுமைகளுடன் நடத்தி வருகின்றனர்.

மக்களின் வயிற்றுப் பசியை வைத்தே அரசியல் செய்ய முடியும். அந்த வயிற்று பசிக்கு தீர்வு கிடைத்து விட்டால் மக்கள் அரசியல்வாதிகளை மறந்து விடுவார்கள் என அண்மையில் வெளியான திரைப்படமொன்றில் பேசப்பட்ட வசனங்கள் கூட இந்த மலையக மக்களின் வாழ்க்கையோடு ஒத்துபோக கூடியதாக இருகின்றது.

காரணம் அவர்களின் நாளாந்த சம்பளத்தை வைத்து சந்தோசமாக உண்டு உடுத்தி வாழும் நிலைமை அவர்களிடத்தில் இல்லை. தமது அடிப்படை தேவைகளை கூட பூர்திசெய்துகொள்ள  தாம் தெரிவு செய்ய மக்கள் பிரதிநிதிகளை நம்பி இருக்க வேண்டிய நிலையே உள்ளது.

ஆனாலும் அந்த மக்கள் பிரதிநிதிகளும் மக்களை ஏமாற்றி காட்டி கொடுத்து விட்டதாக சிவில் அமைப்புக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலையில், கடந்த பல மாதங்களாக தமக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என பெருந்தோட்ட மக்கள் பேராடி வந்தனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்காக அனைத்து இன மக்களும் நாடளாவிய ரீதியில் பேராடியிருந்தனர். அதாவது தேசிய பிரச்சினையாக இம்முறை இது மாற்றப்பட்டிருந்தது. இதற்கு முழுக் காரணகர்த்தாவாக இளைஞர்களின் உந்துசக்தி காணப்பட்டது.

வழமைபோன்று தொழிலாளர்கள் போராடுவார்கள், அவர்களை ஏமாற்றி விடலாம் என எண்ணிய தொழிசங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் அரசாங்கமும் இம்முறை சற்று ஆட்டங்கண்டு போய்விட்டன.

தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் என பலரும் இம்முறை பெருந்தோட்ட மக்களுக்காக குரல் கொடுத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆயிரம் சம்பளம் என்பதே எமது நோக்கு, அதில் இருந்து நாம் மாறமாட்டோம். ஒருவேளை 1000 ரூபா சம்பளத்தை பெற்றுகொடுக்க தவறினால் எமது பதவிகளை இராஜினாமா செய்வோம் என்று கூறிய தொழிற்சங்கவாதிகளும் 700 ரூபாவுக்கான கூட்ட ஒப்பந்தத்தில் கைசாத்திட்டு விட்டு அதற்கு பல நியாயங்களை கூறினர்.

அது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலம் முதல் பல விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சம்பள நிர்ணயசபை ஊடான சம்பள உயர்வு முறையை வரவேற்று பேசியிருந்த பலர் கூட்டு ஒப்பந்தம் மக்களின் அடிமை சாசனம் எனவும் மரண சாரணம் எனவும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

மேலும் குறித்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் பல சரத்துக்கள் காணப்படுவதாகவும் அவற்றை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தமான இரண்டு வருடத்துக்கு ஒரு முறை செய்யப்படுவதால் இடைக்காலப் பகுதியில் ஏற்படும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற மாநியங்கள் வழங்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மேலும் குறித்த கூட்டு ஒப்பந்தம் இல்லாதொழிக்க வேண்டும் என இளைஞர்களின் குழுவும் புத்தி ஜீவிகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு மக்களின் கனவு கலைந்து விட்டது. இருந்தும் 1000 ரூபாவுக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

மேலும் இம்முறை சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அடையாளப்படுத்துவோம்என ‘ஒருமி’ மலையக சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

'பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையே 2019.01.28 செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் திட்டமிட்ட வகையில் கூட்டுத் துரோகத்திற்கும் ஏமாற்றத்திற்கும் மட்டுமல்ல வறுமைக்குள்ளும் கடனுக்குள்ளும் வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமையை ‘ஒருமி’ மலையக சிவில் சமூக அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு இதனை ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ முடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றது.

கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமைசாசனம் மூலம் கட்டமைப்பட்ட வறுமைக்குள் தொழிலாளர் சமூகத்தைத் தள்ளி தங்கிவாழும் வாழ்வு நிலைக்குள் வைப்பதுதான் தொழிற்சங்கத்தின் கடமையும் பொறுப்புமா? பொருளாதார ரீதியில் பாதுகாப்பான சூழ்நிலையில் கூட்டு சமூகமாக வாழக்கூடாது எனும் மனநிலையிலேயே இவ்வொப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய பிரதமர் தான் ஜனநாயகத்தின் காவலன் என்றும் அலரிமாளிகை ஜனநாயகத்தின் அடையாளம் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அவரின் தலைமையில் ஜனநாயகத்தின் அடையாளமான இடத்தில் தாமே கொடுத்த சம்பள வாக்குறுதியை மீறி உழைக்கும் மக்கள் சமூகத்தின் வாழ்வு பறித்தழிக்கும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டமை எந்த வகையில் ஜனநாயகமாகும். வறுமை கொதிந்தெழுந்து பேசும் நாளில் ஜனநாயக விரோதிகளின் முகம் கிழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 71ஆவது சுதந்திர விழாவுக்கு ஆயத்தப்பட்டுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சுமக்கும் மக்கள் சமூகத்தின் மீது பொருளாதார ஒடுக்குமுறையை சுமத்தி சுதந்திரம் பறித்து அவர்களின் அமைதியான ஜனநாயக நீரோட்ட வாழ்வை அழித்தொழிக்கும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் மூலம் யுத்த வெற்றி மனநிலையை உருவாக்கி நாட்டை அழித்து இன அழிப்பிற்கு வெற்றி விழா நடத்துபவர்கள் மீண்டும் ஒருமுறை உண்மையான சுதந்திரத்தை அவமானப்படுத்தியுள்ளனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை கண்டிக்கும் முகமாகவும் ஒடுக்கப்படும் மலையக மக்களை சுதந்திர வாழ்விலிருந்து நீக்கம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் மலையகமெங்கும் கறுப்புக்கொடியேற்றி 71ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக அடையாளப்படுத்துமாறு மலையக உணர்வுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என மலையக சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அண்மையில் பாராளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மலையக மக்கள் தொடர்பான சில சான்றுகளை முன்வைத்திருந்தார்.

அதாவது, ' 150 ஆண்டுகளாக வேதனைப்பட்டு வாழும் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் இப்போதாவது நியாயங்களை பெற்றுகொடுக்கும் கடமை எமக்கு இல்லையா? 

அவர்களின் வாழ்வாதாரத்தை நோக்கினால் இந்த நாட்டில் மிகவும் கீழ்த்தரமான வாழ்கையை வாழ்கின்றனர். வறுமைக்கோட்டில் கீழ் வாழும் மக்கள் என அரசாங்க கணக்கெடுப்பு மூலமாக 4.1 வீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டிலேயே 4.1 வீதம் என குறிப்பிடும் போது மலையகத்தில் மாத்திரம் 8.8 வீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். தனிநபர் வருமானத்தை கொண்டால் ஒரு சாதாரண குடிமகன் மாதம் 16377 ரூபாய் தனிநபர் வருமானமாக பெறுகின்றார்.

ஆனால் மலையகத்தில் ஒரு நபர் வெறுமனே 8566 ரூபாவை மட்டுமே பெறுகின்றார். சாதாரண குடிமகன் ஒருவர் பெரும் மாத வருமானத்தை விடவும் ஒரு மடங்கு குறைந்த வருமானத்தையே மலையக மக்கள் பெறுகின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாத த்திற்கு சாதாரணாம வாழவே 54ஆயிரத்து 990 ரூபாய் தேவைப்படுகின்றது என அரச ஆய்வுகளே கூறுகின்றது. அப்படி இருக்கையில் மலையக மக்கள் இதனை விடவும் குறைந்த வருமானத்தை கொண்டே குடும்பங்களை நடத்துகின்றனர்.

வாழ்க்கை என்பது உணவு மட்டும் அல்ல. உடை, உறையும், ஏனைய மகிழ்ச்சிகர விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். பொதுவாக ஒரு குடும்பத்திற்கு 35 வீதமே உணவிற்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் மலையகத்தில் 51 வீதம் அவர்களின் உணவு தேவைக்காக செலவழிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால், மலையக மக்களின் சுகாதார தேவை மிகவும் அவசியமாக உள்ளது. நூற்றுக்கு 21 வீத பிள்ளைகள் மந்தபோனசமானவர்கள். 17 வீதமான குழந்தைகள் நிறை குறைந்தவர்கள், 15 வீதமானவர்கள் உயரம் குறைந்தவர்கள்.

ஐந்து வயதுக்கும் குறைந்த பெருமளவிலான குழந்தைகள் இவ்வாறு நோயாளர்களாக உள்ளனர். அதேபோல் இன்று மலையகத்தில் மந்தபோசன பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கர்ப்பிணி பெண்களில் மூன்றில் ஒருவர் இரத்த ஓட்டம் குறைந்த பெண்ணாக உள்ளார். கல்வியை எடுத்துக்கொண்டால் சாதாரண தரத்திற்கு தகுதியாகாத மாணவர்கள் 47 வீதமானோர் உள்ளனர். உயர் தரத்திற்கு 12 வீதமான மாணவர்களே தகுதி பெறுகின்றனர்.

உயர்கல்வியை 2 வீதமான மாணவர்களே பெறுகின்றனர். 14 பல்கலைக்கழகங்களுக்கு அண்ணளவாக 28 ஆயிரம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களின் 120-150 மாணவர்களே மலையகத்தில் இருந்து உள்வாங்கப்படுகின்றனர். இவர்களில் 30 க்கும் குறைவான மாணவர்களை விஞ்ஞான, கணித பாடங்களை தெரிவுசெய்ய முடிகின்றது. இன்று மலையகத்தில் உள்ள எத்தனை பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் தமது தாய் மொழியில் கற்கும் வசதிகள் உள்ளது? இவ்வாறான சமூகம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டுமா? சாதாரண சமூல கட்டமைப்பில் இருந்து மலையக மக்களை ஒதுக்கும் வேலையையே நாம் செய்துகொண்டுள்ளோம்.

இலங்கையில் ஏனைய அனைத்து பகுதிகளிலும் வீடுகளில் 22.8 வீதமானவர்களின் வீடுகளில் கணினி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் மலையகத்தில் 4.5 வீத வீடுகளில் தான் கணினிகள் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. தொழிநுட்ப அறிவைக்கூட சரியாக அவர்களுக்கு கொடுக்கவில்லை.

சாதாரண மக்களை விடவும் அரைவாசிக்கும் குறைவான வசதிகளே மலையகத்தில் காணப்படுகின்றது. வீடுகள் இல்லாத மலையக மக்கள் பலர் இன்னமும் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் பொது வாழ்கையை எடுத்துப்பாருங்கள், அனைவருக்குமே பாகுபாடு இல்லாத சமூக உரிமைகள், சமூக அந்தஸ்து இருக்க வேண்டும்.

ஆனால் மலையக மக்கள் குறித்து உள்ள நிலைப்பாடு என்ன. இங்கு சொகுசு வாழ்க்கை வாழும் நபர்கள், தமது வீட்டு வேளைக்கு ஒரு தோட்ட பெண் இல்லையா என கேட்கின்றனர், உணவகத்தில் வேலை செய்ய, மலசலகூடம் சுத்தம் செய்ய தோட்டத்தில் ஒரு இளைஞன் கிடைக்கமாட்டன என கேட்கின்றனர். இன்று மலையகத்தில் மிக அதிகமான போதைப்பொருள் பரப்பப்படுகின்றது. அவர்களின் வாக்குகளில் வரும் ஒருசில அரசியல் வாதிகளே இன்று அங்கு அதிகளவில் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த அரசாங்கம் கூறிய சில விடயங்களை கூருகின்றேன், 2017 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 5 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாம், 2017 ஆம் ஆண்டில் உலகில் சகல நாடுகளில் தேயிலை விலை அதிகரிப்பு காரணமாக எமக்கு பாரிய வருமானம் கிடைத்ததாம், 2017 ஆண்டில் 29 வீதத்தால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம், சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம், வெளிநாட்டு இருப்பு அதிகரித்துள்ளதாம் என 2018 ஆம் ஆண்டில் அப்போதைய பெருந்தோட்ட துறை அமைச்சர் கூறினார். தேயிலை உற்பத்தி அதிகரிப்பு குறித்து மார் தட்டிக்கொண்டார்.

ஆனால் அதற்காக பாடுபட்ட மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது. அவர்களின் உழைப்பு இல்லாது, அவர்கள் தியாகம் செய்யாவிட்டால், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் இவ்வாறு எந்த அபிவிருத்தியும் கிடைக்கப்போவதில்லை. முதலாளிமார் எவரும் பணம் பார்க்க முடியாது. ஆகவே அவர்களின் உழைப்புக்கான ஊதியல் கொடுக்கப்படுகின்றதா? 1992 ஆம் ஆண்டு தோட்ட கம்பனிகள் தோட்டங்களை வாங்கிய போது இருந்த செழிப்பு இப்போது இல்லை என்றால் அதற்கு தொழிலாளர் பொறுப்பாக முடியாது. இதற்கு தோட்ட நிறுவனங்களே காரணமாகும். 1992 ஆம் ஆண்டு 400 தொழிற்சாலைகள் இருந்தது. அதில் 200 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. இதற்கு நிறுவனங்களே காரணம்.

அவர்களின் இலாபத்தை கருத்தில் கொண்டு செயற்படும் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர் பொறுப்பில்லை. தொழிலாளர்களுக்கு எந்த சம்பவமும் இல்லாத காரணிகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். நிறுவனம் தமக்கு தேவையான வகையில் தீர்மானம் எடுக்க முடியாது. அடிப்படை சம்பளத்தை கொடுத்தே ஆகவேண்டும்.

மலையக தோட்டத்தொழிலாளர் தோட்டங்களில் கட்டப்பட்ட மாடுகள் என்ற நிலைமையில் தோட்ட நிறுவனங்கள் நினைத்துக்கொண்டுள்ளது. தோட்ட நிறுவனங்களின் தேவைக்கேற்ப இவர்களை பயன்படுத்தி வருகின்றது. இப்போது 730 ரூபாய் கிடைக்கின்றது. இதில் அடிப்படை சம்பளம் 530 ரூபாய், ஏனைய அனைத்துமே அவர்களின் கொடுப்பனவு அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது. முழுமையாக 730 ரூபாய் பெற்றுக்கொள்ளும் 35 வீதமானவர்களே உள்ளனர். ஏனையவர்கள் அவ்வாறு பெற்றுக்கொள்வதில்லை.

ஒரு வேலை உணவுக்கு 1000-1500 ரூபாய் செலவழிக்கும் சமூகம் உள்ளது, அவ்வாறு இருக்கையில் தோட்டத்தொழிலாளர் அவர்களின் ஒருநாள் சம்பளம் 500 என நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயமானது. அடிமட்டத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தோட்ட நிறுவனங்களின் 21 நபர்களின் கையில் தான் உள்ளது என கூறுவது எவ்வாறு நியாயமாகும். மலையக அரசியல் வாதிகள் அம்மக்களை வைத்துகொண்டு எவ்வாறு அரசியல் செய்கின்றீர்கள். வாக்கு கேட்கும் போது உங்களுக்கு பாகுபாடு தெரியவில்லை அல்லவா. பிரச்சினை என வரும்போது மட்டும் ஏன் தலைகளை எண்ணுகின்றீர்கள்.

எமது நாட்டின் அரச தொழிலில் ஈடுபடும் சாதாராண தொழிலாளர் ஒருவரது அடிப்படை சம்பளம் 32,040 ரூபாய். ஆனால் மலையகத்தில் தோட்டத்தொழிலாளிக்கு 500 ரூபாய் கொடுப்பது எந்த வகையில் நியாயமானது. அவர்களுக்கு நியாயமாக பார்த்தல் 1281 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் 1000 ரூபாய் கேட்கின்றனர். அதையாவது கொடுக்க வேண்டும். தொழிற் சங்கங்கள் அவர்களின் போராட்டங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மாறாக தொழிற்சங்கங்களும் தோட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்படுவது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். இவை மாற வேண்டும். நாம் யாரும் நிறுவனங்களுக்கு அடிபணியாது மக்களின் பக்கம் கைகோர்த்து போராட வேண்டும். இலங்கை மக்கள் என நினைக்கும் அனைவரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் இருந்து 18 மாதகாலம் உடன்படிக்கை செய்துகொள்ளப்படாது உள்ளது, இன்றும் அவர்களுக்கான கொடுப்பனவு கொடுக்கப்படாதுள்ளது. ஆகவே கடந்த காலங்களில் கொடுக்கவேண்டிய கொடுப்பனவுகளை இப்போதாவது அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

உரிய அமைச்சர்கள் இன்று சுகபோக வாழ்க்கை வாழ்வது தோட்ட தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே இந்த உண்மையான போராட்டத்தை கருத்தில் கொண்டு 150 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வரும் மக்களுக்கு இப்போதாவது தீர்வினை பெற்றுக்கொடுப்போம், வரலாற்றில் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்திட்ட்கும் நிகழ்காலத்தில் நட்டஈடு கொடுக்க வேண்டும், அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பல சுமைகளையும், துயரச் சுவடுகளையும் சுமந்து வாழும் மக்களின் வாழ்கையில் எவ்வாறு சுதந்திர தினம் அர்த்தமுள்ளதாக அமைய போகின்றது என்ற கேள்வி மாத்திரமே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சுதந்திர தினத்தை கூட கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு யார் வழிவகுத்தார்கள்? இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும்? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமாக இருந்தால் அடுத்த சுதந்திர தினம் சரி எமது மக்களின் உண்மையான சுதந்திர தினமாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13