(ப.பன்னீர்செல்வம்)

நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதத்திற்கோ யுத்தத்திற்கோ இடமில்லை இதனை தமிழ் மக்கள் விரும்பவுமில்லை என தெரிவிக்கும் அரசாங்கம் தமிழக அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணியப் போவதுமில்லை. அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க தயாரும் இல்லையென அரசு அறிவித்தது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சில் இநேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அரசு சார்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார். 

அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கியும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதை பெரிதுபடுத்தி பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலொன்றும், மீண்டும் புலிப்பயங்கரவாதம் தலை தூக்குவதாகவும் பிரசாரம் செய்கின்றனர். இதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. 

தினம் தினம் இவ்வாறான ஆயுதங்கள்  கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால் தேசியப் பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை.