மலையக மக்கள் தொடர்பாக கசக்கும் உண்மைகளை பாராளுமன்றில் வெளிப்படுத்திய ஜே.வி.பி. : முழுமையான தகவல் இதோ..!

Published By: Vishnu

25 Jan, 2019 | 12:06 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வரலாற்றில் நூற்று ஐம்பது ஆண்டுகளாக உரிமையை, அந்தஸ்தை, அடையாளத்தை, அடிப்படை  உரிமைகளை பறித்து தண்டிக்கப்பட்ட மலையக மக்களுக்கு இப்போதாவது நட்டஈட்டு வழங்கவேண்டும் என நினைத்தால் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி மடுத்து அடிப்படை சம்பளத்தை வழங்கவேண்டும். இலங்கையர் என்ற உணர்வில் சிந்திக்கும் அனைத்து நபர்களும் தொழிலாளர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார். 22 கம்பனிக்கார்களின் நோக்கங்களுக்கு அரசாங்கம் அடிபணிய வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மலையக தோட்டத் தொழிலாளர்களின்  ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதுடன் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுகொடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயகவினால் நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் சபையில் மேலும் கூறியதானது,

இன்று நாட்டில் மலையக மக்களின் போராட்டம் நாடளாவிய ரீதியில் பரவி வருகின்றது. குறிப்பாக கொழும்பில் வசிக்கும் மலையக இளைஞர்களின் ஈடுபாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அதேபோல் ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்களும் கடந்த ஆண்டு இறுதியில் வேலை நிறுத்த போராட்டங்களும் இடம்பெற்றது. நேற்றும் மலையக பகுதிகளில், கொழும்பில் மற்றும் பல்கலைக்கழகங்களில் அவர்களின் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளின் மூலமாக எந்த நலனும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. மலையக மக்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் நியாயமான போராட்டமாகும். மலையகதில் வாழும் மக்கள் எமது நாட்டில் வாழும் எமது மக்கள் என்ற நிலையை உணர்ந்து, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் சலுகைகள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தால் இவர்களின் போராட்டத்தை எம்மால் புறக்கணிக்க முடியாது. இந்த நாட்டின் அரசாங்கம் நிறுவனங்களின் நலன்களை விடவும் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஆனால் அரசாங்கம்  மக்களின் நிலைமையை கருத்தில் கொள்ளவில்லை என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.  நாம் இவர்களுக்காக உள்ள தலைவர்கள் என்றால் இவர்களின்  கோரிக்கையை எம்மால் நிராகரிக்கவே முடியாது.

இந்த மக்கள் மிகவும் கடினமானதும் மோசமானதுமான வாழ்கையை கடந்துவந்த மக்கள். அன்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இங்கு வரவழைக்கப்பட்ட நேரத்தில் நூறு பேர் கரைக்கு வந்தார்கள் என்றால் அவர்களில் ஐம்பது பேர்தான் மலையகத்திற்கு சென்றடைந்தனர். ஏனைய ஐம்பது பேர் துறைமுகத்தில் இருந்து மலையகத்திற்கு போக முன்னர் இடையில் இறந்து போய்விடுவார்கள். மலேரியா போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு விடுவார்களாம். அதேபோல் மலையகத்திற்கு சென்ற ஐம்பது பேரிலும் 25 பேர் அங்குள்ள கடின வேலைகளினால் உயிரிழந்துவிடுவார்கள். இந்தியாவில் இருந்து வரும் நூறு பேரில் 25 பேர் தான் உயிர் வாழ்வார்கள் என்ற அவல நிலை இருந்துள்ளது.

அதேபோல் இந்த மக்களின் பிரஜாவுரிமையைப் பரிந்தும், நிலம் இல்லாத மக்களாக எமது நாட்டிலேயே வாழ்ந்த நிலைமையும் இருந்தது. உடன்படிக்கைகளுக்கு அமைய குப்பைகள் போன்று கப்பல்களில் நிறைத்து ஏனைய நாடுகளுக்கு ஏற்றவும் இறக்கவும் செய்யும் மக்கள் வியாபாரம் கூட இடம்பெற்றுள்ளது. இவர்களை மனிதர்கள் என்ற உணர்வே இல்லாது வரலாற்றில் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகங்கொடுத்த மக்கள் இவர்கள். இவ்வாறு 150 ஆண்டுகளாக வேதனைப்பட்டு வாழும் மக்களுக்கும் இப்போதாவது நியாயங்களை பெற்றுகொடுக்கும் கடமை எமக்கு இல்லையா?

அவர்களின் வாழ்வாதாரத்தை நோக்கினால் இந்த நாட்டில் மிகவும் கீழ்த்தரமான வாழ்கையை வாழ்கின்றனர். வறுமைக்கோட்டில் கீழ் வாழும் மக்கள் என அரசாங்க கணக்கெடுப்பு மூலமாக 4.1 வீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டிலேயே 4.1 வீதம் என குறிப்பிடும் போது மலையகத்தில் மாத்திரம் 8.8 வீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். தனிநபர் வருமானத்தை கொண்டால் ஒரு சாதாரண குடிமகன் மாதம் 16377 ரூபாய் தனிநபர் வருமானமாக பெறுகின்றார்.

ஆனால் மலையகத்தில் ஒரு நபர் வெறுமனே 8566 ரூபாவை மட்டுமே பெறுகின்றார். சாதாரண குடிமகன் ஒருவர் பெரும் மாத வருமானத்தை விடவும்  ஒரு மடங்கு குறைந்த வருமானத்தையே மலையக மக்கள் பெறுகின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாத த்திற்கு சாதாரணாம வாழவே  54ஆயிரத்து 990 ரூபாய் தேவைப்படுகின்றது என அரச ஆய்வுகளே கூறுகின்றது. அப்படி இருக்கையில்  மலையக மக்கள் இதனை விடவும் குறைந்த வருமானத்தை கொண்டே குடும்பங்களை நடத்துகின்றனர். வாழ்க்கை என்பது உணவு மட்டும் அல்ல. உடை, உறையும், ஏனைய மகிழ்ச்சிகர விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். பொதுவாக ஒரு குடும்பத்திற்கு 35 வீதமே உணவிற்காக ஒதுக்கப்படுகின்றது. ஆனால் மலையகத்தில் 51 வீதம் அவர்களின் உணவு தேவைக்காக செலவழிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால், மலையக மக்களின் சுகாதார தேவை மிகவும் அவசியமாக உள்ளது.  நூற்றுக்கு  21 வீத பிள்ளைகள் மந்தபோனசமானவர்கள்.  17 வீதமான குழந்தைகள்  நிறை குறைந்தவர்கள், 15 வீதமானவர்கள் உயரம் குறைந்தவர்கள்.  ஐந்து வயதுக்கும் குறைந்த பெருமளவிலான  குழந்தைகள் இவ்வாறு நோயாளர்களாக உள்ளனர். அதேபோல்  இன்று மலையகத்தில் மந்தபோசன பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கர்ப்பிணி பெண்களில் மூன்றில் ஒருவர் இரத்த ஓட்டம் குறைந்த பெண்ணாக உள்ளார். கல்வியை எடுத்துக்கொண்டால் சாதாரண தரத்திற்கு தகுதியாகாத மாணவர்கள் 47 வீதமானோர் உள்ளனர்.

உயர் தரத்திற்கு 12 வீதமான மாணவர்களே தகுதி பெறுகின்றனர். உயர்கல்வியை 2 வீதமான மாணவர்களே பெறுகின்றனர். 14 பல்கலைக்கழகங்களுக்கு அண்ணளவாக 28 ஆயிரம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களின் 120-150 மாணவர்களே மலையகத்தில் இருந்து உள்வாங்கப்படுகின்றனர். இவர்களில் 30 க்கும் குறைவான மாணவர்களை விஞ்ஞான, கணித பாடங்களை தெரிவுசெய்ய முடிகின்றது. இன்று மலையகத்தில் உள்ள எத்தனை பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் தமது தாய் மொழியில் கற்கும் வசதிகள் உள்ளது? இவ்வாறான சமூகம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டுமா? சாதாரண சமூல கட்டமைப்பில் இருந்து மலையக மக்களை ஒதுக்கும் வேலையையே நாம் செய்துகொண்டுள்ளோம்.

இலங்கையில் ஏனைய அனைத்து பகுதிகளிலும்  வீடுகளில் 22.8 வீதமானவர்களின் வீடுகளில் கணினி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் மலையகத்தில் 4.5 வீத வீடுகளில் தான் கணினிகள் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. தொழிநுட்ப அறிவைக்கூட சரியாக அவர்களுக்கு கொடுக்கவில்லை. சாதாரண மக்களை விடவும் அரைவாசிக்கும் குறைவான வசதிகளே மலையகத்தில் காணப்படுகின்றது. வீடுகள் இல்லாத மலையக மக்கள் பலர் இன்னமும் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் பொது வாழ்கையை எடுத்துப்பாருங்கள், அனைவருக்குமே பாகுபாடு இல்லாத சமூக உரிமைகள், சமூக அந்தஸ்து இருக்க வேண்டும். ஆனால் மலையக மக்கள் குறித்து உள்ள நிலைப்பாடு என்ன. இங்கு சொகுசு வாழ்க்கை வாழும் நபர்கள், தமது வீட்டு வேளைக்கு ஒரு தோட்ட பெண் இல்லையா என கேட்கின்றனர், உணவகத்தில் வேலை செய்ய, மலசலகூடம் சுத்தம் செய்ய தோட்டத்தில் ஒரு இளைஞன் கிடைக்கமாட்டன என கேட்கின்றனர். இன்று மலையகத்தில் மிக அதிகமான போதைப்பொருள் பரப்பப்படுகின்றது. அவர்களின் வாக்குகளில் வரும் ஒருசில அரசியல் வாதிகளே இன்று அங்கு அதிகளவில் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த அரசாங்கம் கூறிய சில விடயங்களை கூருகின்றேன், 2017 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தி 5 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாம், 2017 ஆம் ஆண்டில் உலகில் சகல நாடுகளில் தேயிலை விலை அதிகரிப்பு காரணமாக எமக்கு பாரிய வருமானம் கிடைத்ததாம், 2017 ஆண்டில் 29 வீதத்தால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம், சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம், வெளிநாட்டு இருப்பு அதிகரித்துள்ளதாம் என 2018 ஆம் ஆண்டில் அப்போதைய பெருந்தோட்ட துறை அமைச்சர் கூறினார். தேயிலை உற்பத்தி அதிகரிப்பு குறித்து மார் தட்டிக்கொண்டார்.ஆனால் அதற்காக பாடுபட்ட மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது. அவர்களின் உழைப்பு இல்லாது, அவர்கள் தியாகம் செய்யாவிட்டால், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் இவ்வாறு  எந்த அபிவிருத்தியும் கிடைக்கப்போவதில்லை.

முதலாளிமார் எவரும் பணம் பார்க்க முடியாது. ஆகவே அவர்களின் உழைப்புக்கான ஊதியல் கொடுக்கப்படுகின்றதா?  1992 ஆம் ஆண்டு தோட்ட கம்பனிகள் தோட்டங்களை வாங்கிய போது இருந்த செழிப்பு இப்போது இல்லை என்றால் அதற்கு தொழிலாளர் பொறுப்பாக முடியாது. இதற்கு தோட்ட நிறுவனங்களே காரணமாகும். 1992 ஆம் ஆண்டு 400 தொழிற்சாலைகள் இருந்தது. அதில் 200 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. இதற்கு நிறுவனங்களே காரணம். அவர்களின் இலாபத்தை கருத்தில் கொண்டு செயற்படும் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர் பொறுப்பில்லை. தொழிலாளர்களுக்கு எந்த சம்பவமும் இல்லாத காரணிகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். நிறுவனம் தமக்கு தேவையான வகையில் தீர்மானம் எடுக்க முடியாது. அடிப்படை சம்பளத்தை கொடுத்தே ஆகவேண்டும்.

மலையக தோட்டத்தொழிலாளர் தோட்டங்களில் கட்டப்பட்ட மாடுகள் என்ற நிலைமையில் தோட்ட நிறுவனங்கள் நினைத்துக்கொண்டுள்ளது. தோட்ட நிறுவனங்களின் தேவைக்கேற்ப இவர்களை பயன்படுத்தி வருகின்றது. இப்போது 730 ரூபாய் கிடைக்கின்றது. இதில் அடிப்படை சம்பளம் 530 ரூபாய், ஏனைய அனைத்துமே அவர்களின் கொடுப்பனவு அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது.

முழுமையாக 730 ரூபாய் பெற்றுக்கொள்ளும் 35 வீதமானவர்களே உள்ளனர். ஏனையவர்கள் அவ்வாறு பெற்றுக்கொள்வதில்லை.  ஒரு வேலை உணவுக்கு 1000-1500 ரூபாய் செலவழிக்கும் சமூகம் உள்ளது, அவ்வாறு இருக்கையில்  தோட்டத்தொழிலாளர் அவர்களின் ஒருநாள் சம்பளம் 500 என நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயமானது. அடிமட்டத்தில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தோட்ட நிறுவனங்களின் 21 நபர்களின் கையில் தான் உள்ளது என கூறுவது எவ்வாறு நியாயமாகும். மலையக அரசியல் வாதிகள் அம்மக்களை வைத்துகொண்டு எவ்வாறு அரசியல் செய்கின்றீர்கள். வாக்கு கேட்கும் போது உங்களுக்கு பாகுபாடு தெரியவில்லை அல்லவா. பிரச்சினை என வரும்போது மட்டும் ஏன் தலைகளை எண்ணுகின்றீர்கள்.

எமது நாட்டின் அரச தொழிலில் ஈடுபடும் சாதாராண தொழிலாளர் ஒருவரது அடிப்படை சம்பளம் 32,040 ரூபாய். ஆனால் மலையகத்தில் தோட்டத்தொழிலாளிக்கு 500 ரூபாய் கொடுப்பது எந்த வகையில் நியாயமானது. அவர்களுக்கு நியாயமாக பார்த்தல் 1281 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் 1000 ரூபாய் கேட்கின்றனர். அதையாவது கொடுக்க வேண்டும். தொழிற்  சங்கங்கள் அவர்களின் போராட்டங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். மாறாக தொழிற்சங்கங்களும் தோட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்படுவது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். இவை மாற வேண்டும். நாம் யாரும் நிறுவனங்களுக்கு அடிபணியாது மக்களின் பக்கம்  கைகோர்த்து  போராட வேண்டும்.

இலங்கை மக்கள் என நினைக்கும் அனைவரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். 2015 ஆம் ஆண்டில் இருந்து 18 மாதகாலம் உடன்படிக்கை செய்துகொள்ளப்படாது உள்ளது, இன்றும் அவர்களுக்கான கொடுப்பனவு கொடுக்கப்படாதுள்ளது. ஆகவே கடந்த காலங்களில் கொடுக்கவேண்டிய கொடுப்பனவுகளை இப்போதாவது அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

உரிய அமைச்சர்கள் இன்று சுகபோக வாழ்க்கை வாழ்வது தோட்ட தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே இந்த உண்மையான போராட்டத்தை கருத்தில் கொண்டு 150 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வரும் மக்களுக்கு இப்போதாவது தீர்வினை பெற்றுக்கொடுப்போம், வரலாற்றில் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்திட்ட்கும் நிகழ்காலத்தில் நட்டஈடு கொடுக்க வேண்டும், அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46