பாகிஸ்தானில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி 71 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பதுன் கவா, கில்ஜித்-பல்சிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கடும்மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளது.

பெஷாவர் பகுதியில் மட்டும் 36 பேரும் கோஹிஸ்தான் பகுதியில் 12 பேரும், கில்ஜித்-பல்சிஸ்தான் பகுதியில் 11 பேரும் பலியாகியுள்ளனர். மண்சரிவு, வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் அதிக உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 71 பேர் இறந்துள்ளனர்.

கடும் மழையினால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. பிரதான வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று பாகிஸ்தான் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் அந்த நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கும், உடமைகளை இழந்தவர்களுக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசேன்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.