வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

மதுரோவுக்கு எதிராக, இராணுவத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வலியுறத்தி ஒரு காணொளியொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

குறித்த காணொளி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே வெனிசலாவின் வடக்கு காரகாசில் உள்ள கோட்டிசா பகுதியில் உள்ள முகாமில், கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது அவர்களை பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 

வெனிசுலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் தேர்தலில் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன. 

அதேசமயம் பாராளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால், நிகோலஸ் மதுரோ 2 ஆவது முறையாக ஜனாதிபதி ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். 

இருப்பினும் அவர் கடந்த 10 ஆம் திகதி  2 ஆவது முறையாக அந் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.