முப்பது வருடகாலமாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தை எமது  இராணுவம் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. அதனால் தோல்வியுற்ற தரப்புக்கள் கோபத்தில் இருக்கக்கூடும். எனவே எமது நாட்டின் முன்னாள் தலைவர்களும் தற்போதைய தலைவர்களும் மி க அவதானமாக செயற்பட வேண்டும்.  இல்லாவிடின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடலாமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.  

யாழ். சாவகச்சேரியில்   வெடிபொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  கருத்து தெரிவிக்கையிலேயே     அவர் மேற்கண்டவாறு  கூறினார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையி்ல்,

எமது நாட்டில் யுத்தம் நிறைவுற்று 5 வருடங்களுக்கு மேலாகின்ற நிலையில் யுத்தத்தின் வடுக்கள் இன்றும் உள்ளமையினை சில நடைமுறைச் செயற்பாடுகளின் ஊடாக உணர்ந்துக்கொள்ள முடிகின்றது.

இவை கடந்த முப்பது வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தில் தோல்வியுற்ற தரப்பினரிடத்தில் அதிகளவாக இருக்கலாம்.  அது அவர்களின் கோபமாகவும் வெளிப்படும் சாத்தியங்கள் உள்ளன. அண்மையில்   சாவகச்சேரியில் தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி இதுவாகவும் இருக்கலாம்.

இவ்வாறு கோபத்தில் உள்ள சில குழுக்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளது.  எனவே எமது நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேணடிய தருணம் உருவாகியுள்ளது.

அதற்கு மாறாக யுத்தம் இடம்பெற்று பல வருடங்கள் ஆகின்றமையினால் அதன் பிரதிபலன்களை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஒருபோதும் உருவாகாது என்ற எண்ணப்பாட்டில் அசமந்தமாக செயற்படுவதால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

எவ்வாறாயினும் யுத்த வெற்றிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமது பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.  எனவே அவர் அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அவர் மட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க   ஆகியோரும் தமது பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

 

அதேபோல் நாட்டு தலைவர்கள் என்ற வகையில் இவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் கவனமாக செயற்பட வேண்டும்.