பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கூடுவதோடு 2.00 மணிக்கு பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார். 

அதேவேளை இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல மேலும் தெரிவிக்கையில், 

இன்று செவ்வாய்க்கிழமை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற சபை அமர்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூன்று தினங்களே நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறமாட்டாது. 

நண்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வு 2.00 மணிவரை வாய்மூல கேள்விகளுக்கான பதிலளிக்கும் மற்றும் சபையில் ஏனைய விடயங்கள் நடைபெறும். 

2.00 மணிக்குப் பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என்றும் பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரியவருகிறது.