மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புது சீருடை வாங்க கூட அணி நிர்வாகம் பணம் தராத நிலையில், கடனுக்கு பணம் பெற்று எனக்கும் சக வீரர்களுக்கும் சீருடை வாங்கினோம் என இருபதுக்கு - 20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சம்மி தெரிவித்துள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் இடம்பெற்ற உகக் கிண்ண இருபதுக்கு -20 இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இதையடுத்து இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கருத்துத் தெரிவிக்கையிலேயேயே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சம்மி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் முகாமையாளராக பணிபுரிந்த அனுபவமே இல்லாதவர். 

எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்கோ கூட செய்யப்படவில்லை. நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதில் நிர்வாகம் குளறுபடி செய்தது. இதனால் ஒட்டு மொத்த அணி சீருடையை  கடனுக்கு வாங்கினோம்.

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் வெல்ல வேண்டும் என்று தெரிவித்து, எம் நாட்டுப் பிரதமர் காலையில், குறுந்தகவல் அனுப்பியிருந்தார். 

அந்த வாழ்த்து செய்தி எங்களுக்கு உத்வேகம் தந்தது. அவருக்கு நன்றி. ஆனால் எங்கள் நாட்டு கிரிக்கெட் சபை அதைக்கூட செய்யவில்லை என சம்மி தெரிவித்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைத் தலைவர் வைக்ளிப் தாவே கேமரூன், 

"கடைசியாக உங்களுக்கான கட்டணத்தை எந்த விமர்சகர் செலுத்தினார்?" என்று கேட்டுள்ளார். மேலும், விரைவிலேயே சம்மியின் பேச்சு பற்றி விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், மேற்கிந்திய தீவுகள் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.