நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் குறித்து அச்சம் கொள்ளாதோர் இல்லாமலிருக்க முடியாது. தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு விழித்திருக்க வேண்டிய நிலைமையை மனிதனுக்கு மனிதனே உருவாக்கிவிட்டுள்ளான். இந்நிலையில் பகல் பொழுதுகளில் தனியாக பயணிப்பதையே தவிர்த்து கொள்ளும் மக்கள் இரவு வேளைகளில் கண்டிப்பாக தனியான பயணங்களை மேற்கொள்வதில்லை. இருந்தபோதிலும் எத்தனையோ சம்பவங்கள் நாட்டில் வெவ்வேறு பாகங்களில் நடந்த வண்ணமே உள்ளன. அவை அனைத்தும் பெண்கள் மீதான கொடுமைகளாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலைக்கு செல்லும் வழியில் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை, வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு, வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் யுவதி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை என பட்டியில் தொடர்வதாகவே உள்ளது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் தங்களின் பிள்ளைகள் தொடர்பிலான பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதில் ஒவ்வொரு பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டியவர்களாகவே உள்ளனர்.

குறிப்பாக, பெண்பிள்ளைகளை இழந்தவர்கள் மாத்திரமல்ல, பெறுமதியான உடமைகளை தொலைத்தவர்களும் எமது சமூகத்தில் ஏராளம். கடுமையாக வியர்வை சிந்தி உழைத்து வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் பலரின் தங்க நகைகள், பணப்பைகள் என்பவற்றை திருடர்களுக்கு ஊதியமாக கொடுத்த சம்பவங்கள் கூட அதிகம்.

இவ்வாறு நடந்தேறும் அட்டூழியங்களை தெரியப்படுத்தினால் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் என அனைவரும் தமது பொறுப்பிலிருந்து கைநழுவி விடுகின்றனர். இந்நிலையில் தமது பாதுகாப்பை எவ்வாறு தக்கவைத்துகொள்வது என்று தெரியாமல் தடுமாறும் சமூகத்துக்கு எப்போது விடிவுவரும் என்பதுதான் புதிராகவுள்ளது.

இவ்வார தேடலும் கூட பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகளை எடுத்துக்கூறுவதாகவே உள்ளது. கொழும்பு நகரை பொறுத்தமட்டில் நகர்புற வீதிகளில் வாகன இரைச்சல் இல்லாத நேரம் என்றால் அதை குறிப்பிட்டு கூற முடியாது. அந்தளவுக்கு பரபரப்பான சூழலை கொண்டதாகவே கொழும்பு நகரம் இருந்து வருகின்றது. இது வழமையான ஒரு விடயமென்றாலும் அதிலும் ஒரு சில வீதிகளில் இரவு பொழுதுகளில் தெரு விளக்குகள் இல்லாமலிருப்பது கவலையளிப்பதாகவே உள்ளது. பொதுவாக இன்று பிரதான வீதிகள் போன்று நகர்புறத்திலுள்ள உள்வீதிகளுக்கும் தெரு விளக்கு என்பது கட்டாயத் தேவையாகும். தூர இடங்களில் தொழில் புரிவோர் பொழுது கழிந்தே வீடு திரும்புவர். இவ்வேளைகளில் அவர்கள் பயணிக்கும் வீதிகளில் தெரு விளக்குகள் இல்லாமலிருப்பது அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறானதொரு சூழலை கொண்டமைந்ததே மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீ பால விநாயகர் கோயில் வீதி. பகல் நேரங்களில் வெறுமையாக தோற்றமளிக்கும் இவ்வீதி பாடசாலை நேரங்களிலும் மாலை வேளைகளிலும் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடமாக காணப்படும். இருந்தாலும் சற்று பொழுது சாயும் நேரங்களில் அவ்வீதியில் செல்வதற்கு தெரு விளக்குகள் இல்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அவ்வீதியினூடாக பயணிப்பதென்பது ஆரோக்கியமானதாக இல்லை எனவும் தங்களின் பாதுகாப்புக்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருப்பதாகவும் குறித்த கப்பித்தாவத்தை வீதியினூடாக பயணிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர் .

மருதானை, கப்பித்தாவத்தை ஸ்ரீபால விநாயகர் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி தேவஸ்தானம் ஆகிய இரு சந்நிதானங்கள் பற்றி அநேகமானோருக்கு தெரிந்திருக்கும். காரணம் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வழிபாடுகளுக்காகவும் திருமண வைபவங்களுக்காகவும் பெயர் போன ஆலயங்கள் என்று கூட சொல்லலாம். டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கப்பித்தாவத்தை வீதியிலேயே குறித்த இவ்விரு ஆலயங்களும் அமைந்துள்ளன. பிரதான வீதியிலிருந்து ஆலயங்களுக்கு செல்வதாக இருந்தால் சுமார் எழுநூறு மீற்றர் தூரம் வரையில் உள்ளே செல்லவேண்டும். எனவே அதிகாலை பொழுதிலும் இரவிலும் பயணிக்கும் போது வீதியில் தெரு விளக்குகள் இல்லாமலிருப்பது தமக்கு மிகுந்த அசௌகரியமாக இருப்பதாக வீதியை பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர்.

அவ்வழியை ஓர் தமிழ் பாடசாலை பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில் இவ்வாறான தேவைகள் தொடர்ந்தும் ஒரு சமூகத்தில் பூர்த்தி செய்யப்படாது இழுத்தடிக்கப்படுமாக இருந்தால் அவற்றால் ஏற்படும் இழப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியாது போகும். எனவே இவ்வீதியில் தெரு விளக்குகளை பொருத்துவதற்கான பணிகளை அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால் நிச்சயமாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பு ஒரு வகையிலேனும் திருப்திப்படுத்தப்படும்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டோர் அக்கறை காட்ட வேண்டும் என்பதே அவ்வீதியை பயன்படுத்துவோரின் தேவையாகவுள்ளது. எனவே விரைவான தீர்வும் விவேகமான செயற்பாடுகளும் புதிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் இடம்பெறவேண்டும்.