முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் புதிய தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் மஹிந்த சமரவீர யுத்தத்துக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தென் பகுதி மீனவர்கள் தவிர்ந்த புதிதாக தென்பகுதியிலிருந்து வரும் மீனவர்களுக்கு முல்லைத்தீவுக் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டாமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாமெனவும் உத்தரவிட்டார்.

நந்திக்கடலை ஆழப்படுத்த அடுத்த வருடம் 1200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரவீர சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.யிடம் உறுதியளித்தார்.