பிரான்ஸில் தாக்குதல் ஒன்றை நடத்த மேற்கொள்ளப்பட்ட சதியுடன் தொடர்புடைய மூன்றாவது நபர் மீது பெல்ஜியத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த சந்தேக நபர் பெல்ஜியப் பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பில் மேலும் இரண்டு பேர் பெல்ஜியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய சந்தேகநபர் ரீடா கிரீக்கே கடந்த வாரம் பாரிஸின் அருகில் கைது செய்யப்பட்டார்.

பெல்ஜியம் மற்றும் பாரிஸில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஒழுங்குபடுத்தியவர்களுடன் இவருக்கு தொடர்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களும் இவரது குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.