மலையக மக்கள் தொடர்பில் குரல்கொடுக்கத் தயார் - விக்கினேஸ்வரன்

Published By: R. Kalaichelvan

02 Jan, 2019 | 02:46 PM
image

ஒரு வித்­தி­யா­ச­மான கேள்வி ஒன்று என்­மீது தொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனை இவ் வருட ஆரம்­பத்தில் ஆராய்வோம் என வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி:- நீங்கள் வட­கி­ழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நலன் பற்றி மட்டும் பேசி வரு­கின்­றீர்கள். மலை­யகத் தமி­ழர்­களும் எங்­களைச் சேர்ந்­த­வர்­களே என்று மேடை­களில் பேசு­கின்­றீர்கள். ஆனால் அவர்கள் நலம் பற்றி எது­வுமே கூறு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இது­வ­ரையில் எந்த வித மேல­திகக் கொடுப்­ப­னவும் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அது­பற்றி உங்கள் கருத்தைத் தெரி­விப்­பீர்­களா?

பதில்: எங்கள் தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்­தாலும் அவர்­க­ளுக்கு ஒரு குறை­பாடு உண்டு. அவர்கள் தென்­னிந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கலாம். இலங்­கையைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கலாம். வேறெந்த நாட்டைச் சேர்ந்­த­வ­ராகக் கூட இருக்­கலாம். தம்­மு­டைய மக்கள் மத்­தியில் தான் என்ற மமதை கொண்­ட­வர்கள் அவர்கள். இன்­னொரு தமிழன் மேலெ­ழு­வதை ஒரு தமிழன் விரும்ப மாட்டான். தனக்­கில்­லா­த­தெது மற்­ற­வ­னிடம் இருக்­கின்­றது என்றே சிந்­திப்பான்.

 தன்­னிலும் பார்க்க மற்­ற­வ­ரிடம் சிறப்­பம்­சங்கள் இருந்தால் அவற்றை மட்டந் தட்டப் பார்ப்பான். ஏதா­வது கூறி அடுத்­தவன் மேலெ­ழு­வதைத் தடுக்கப் பார்ப்பான். தமிழர் வாழும் எந்த இடம் சென்­றாலும் இவ்­வா­றான செயற்­பா­டு­களை நாம் காணலாம். மடகஸ்­கா­ருக்குப் பக்­கத்தில் மீள் ஐக்­கியத் தீவுகள் என்று ஒரு சிறு தீவு உண்டு. Reunion Island என்று அதை அழைப்­பார்கள். அங்கு வாழும் தமி­ழர்கள் எந்தப் பேத­மு­மின்றி, எரிச்சல் புகைச்சல் இன்றி, பொறாமை இன்றி வாழ்­வ­தாகக் கூறு­கின்­றார்கள். ஒரு வேளை அத்­தீவு மட்டும் விதி­வி­லக்கோ நான் அறியேன். 

கேள்வி ஏதோ ஒன்­றாக இருக்க நீங்கள் வேறு விட­யங்­களைப் பற்றிப் பேசு­கின்­றீர்­களே என்று நீங்கள் எண்­ணக்­கூடும். என் இதுவரை­யான கூற்றில் உங்கள் கேள்­விக்குச் சம்­பந்­த­மி­ருக்­கின்­றது. 

அதா­வது மலை­யக மக்­களின் சகல கட்­சி­களும் தொழிற்சங்கங்களும் அவற்றின் தலை­மைத்­து­வங்­களும் சேர்ந்து தம் மக்­களின் ரூ.1000 கோரிக்கை பற்றி பொது­வான, ஐக்­கி­ய­மான ஒரு கோரிக்­கையை விடுத்­துள்­ளனவா? தமக்குள் எந்தப் பேதமுமின்றி கோரி­யுள்­ளார்­களா? தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூபா 1000  நாட் கூலி­யாகக் கிடைக்க வேண்டும் என்­ப­திலும் பார்க்க யார் அதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்­றார்கள் என்பதி­லேயே தோட்டத் தொழி­லா­ளர்­களின் தலை­மைகள் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்­றன போல் எனக்குத் தெரி­கின்­றது.  

இன்று யாழ்ப்­பா­ணத்தில் ரூபா 1200  நாட் கூலிக்குக் குறை­வாக ஒரு­வரை எடுக்க முடி­யாது. அதுவும் அவர்கள் வேலை செய்­வது காலை மற்றும் மதிய தேநீர் நேரத்­தையும் பகல் போசன வேளையையும் முன்­னி­லைப்­ப­டுத்­தியே. நல்ல வேலை செய்­தால்கூட குறை­வான வேலை­யையே செய்­வார்கள். இழுத்தடிப்பார்கள். ஆனால் ரூபா 1200  க்குக் குறைய ஒரு­வரை எடுப்­பது கடினம். தோட்டத் தொழி­லா­ளர்கள் அதி­காலை எழுந்து, பனியில் நனைந்து, பல­வித ஜந்­துக்­களால் தாக்­கப்­பட்டு, குறிப்பிட்ட அளவு கொழுந்­து­க­ளை­யேனும் பறிக்­க­வேண்­டிய கடப்­பாட்­டுக்குக் கட்­டுப்­பட்டு அவற்றைப் பறிப்­பதும் அவற்றைக் கொண்டு சென்று ஆலையில் சேர்ப்­ப­து­மாக முழு நாளும் வேலையில் ஈடு­ப­டு­கின்­றார்கள். 

மாதம் ஒரு குறிப்­பிட்ட அளவு நாட்கள் வேலை செய்தால் இவ்வளவு சம்­பளம், இல்­லையேல் குறைந்த சம்­பளம் என்று இருக்­கின்­றது. முழுச் சம்­பளம் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­காது இருப்­ப­தற்கு தோட்ட நிர்­வாகம் வேலை செய்ய வேண்டியநாட்களைக் குறைத்து விடு­வார்கள். இதையும் ஏற்று அவர்­க­ளுக்கு தற்­போது கிடைக்கும் ஒரு நாட் சம்­ப­ளத்தை வைத்து பல­வற்­றையும் சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது. குழந்­தை­களைப் பள்ளிக் கூடம் அனுப்­பு­வது, நோயுற்ற குடும்­பத்­த­வரைப் பரா­ம­ரிப்­பது, மேலெழும் வாழ்க்கைச் செல­வு­களைச் சமா­ளித்து குடும்பத்தைப் பரா­ம­ரிப்­பது என்று பல­வித செல­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

அவர்கள் சம்­ப­ளத்தில் ஒரு தொகை தொழிற்­சங்­கங்­க­ளுக்கு சந்தாப் பண­மாக கட்­டப்­ப­டு­கி­றது. எனினும் தொழி­லா­ளர்கள் கண்ட மிச்சம் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கட்­சி­களும் தொழிற்சங்­கங்­களும் தமது ஆணவப் போர்­களில் ஈடு­பட்டுக் கொண்டு வரு­கின்­றன. அர­சியல் முரண்­பா­டு­களில் உழன்று கொண்டு இருக்­கின்­றார்கள். மலை­யகக் கட்­சிகள் பல­வற்றின் தலை­வர்கள் என் அன்­புக்­கு­ரி­ய­வர்கள். ஆனால் அவர்­களின் ஒற்றுமை­யற்ற செயற்­பா­டுகள் என் மனதை வருத்­து­கின்­றன.

சகல கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்று சேர்ந்து தமது மக்கள் நலத்தை முன்­னிட்டு தோட்ட முத­லா­ளி­மார்­க­ளு­டனும் அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச வேண்டும். அல்­லது எல்­லோரும் சேர்ந்து ஒரு சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியைப் பேச விட வேண்டும். பேச முதல் கடந்த பத்து வருட தோட்டக் கணக்­கு­களை எம்­மவர் மிக நுணுக்கமாகப் பரி­சீ­லிக்க வேண்டும்.

உண்­மையில் அவர்கள் ரூபா 1000  நாட் சம்­ப­ளத்தைக் கொடுக்க முடி­யாத நிலையில் உள்ளார்களா என்­பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில் கணக்­குகள் தர­வாகத் தயாரிக்­கப்­ப­டு­கின்­றன. செல­வு­களைப் பெருப்­பித்து தொழிலாளர்க­ளுக்குக் கொடுக்கப் பண­மில்லை என்று கூறப்­ப­டு­கிறது என்றே நம்­ப­வேண்­டி­யதாய் உள்­ளது. 

மலை­யகத் தமி­ழர்­க­ளுக்கு உண்­மையில் நாளாந்தம் ரூ 1200  ஐயாவது கொடுக்க வேண்டும். உண்­மையில் கொடுப்­ப­னவு செய்ய முத­லா­ளி­மா­ருக்குப் பணம் குறை­வென்றால் அர­சாங்கம் தலையிட்டு நிதி­யு­த­வி­செய்ய வேண்டும். நாட்டின் மொத்த வரு­மானத்­திற்குப் பங்­க­ளிப்­ப­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்கள். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்­ப­டுத்தி தோட்­டங்­களின் பரா­ம­ரிப்பை விருத்தி செய்ய அர­சாங்கம் முன்­வர வேண்டும். 

எமது தொழிற்­சங்கத் தலை­வர்கள், கட்சித் தலை­வர்கள் ஆகியோர் தமது தொழிற் சங்­கங்­க­ளையும், கட்­சி­க­ளையும் முன்­னேற்­று­வதை மட்டும் பார்க்­காமல் தோட்டத் தொழி­லா­ளர்­களின் நலனில் உண்மை­யான அக்­கறை எடுக்க முன்­வர வேண்டும். இல்­லையேல் தொழி­லா­ளர்கள் தொழிற்­சங்­கங்­க­ளுக்குச் சந்­தாப்­பணம் தாம் கட்டவேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அந்தப் பணத்தைத் தமது மாதாந்தச் செல­வு­க­ளுக்குப் பாவிக்க நேரிடும். இவ்­வா­றான ஒரு கோரிக்கை தற்­போது கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் முன்­னி­லையில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று அறி­கின்றேன். 

மலை­யகத் தொழிற்­சங்­கங்கள், கட்­சிகள் ஆகி­யன தமது தொழிலாளர்கள் நாளாந்தம் படும் பாட்டை சித்­தி­ரித்துக் காட்ட வேண்டும். குறும் படங்கள் போன்­றவை தயா­ரித்து அரசாங்கத்தினருக்கும் எம்­மிடம் தேயிலை வாங்கும் நாட்டுமக்களுக்கும் அந்த நாடு­களின் அர­சாங்­கத்­தி­ன­ருக்கும் போட்டுக் காட்ட வேண்டும். 

வெறும் தேயிலை விற்­பனைப் பிர­சா­ர­மாக அமை­யாது அவைமக்களின் நாளாந்த அல்­லல்­களை எடுத்துக் காட்­டு­வதாய் அமைய வேண்டும். இவ்­வா­றான இன்­னல்­களில், இடர்­களில் சிக்கி வாழும் எமது மக்­க­ளுக்கு நாளொன்­றுக்கு ரூ1000 போதுமா என்ற கேள்­விக்குப் பதில் கோர வேண்டும். 

இப்­பொ­ழுது உங்கள் கேள்­விக்கு வரு­கின்றேன்,

 வட­கி­ழக்கு மாகாண மக்­களின் குறைகள் அடிப்­ப­டையில் அரசியல் சார்ந்­தது,உரி­மைகள் சார்ந்­தது,உரித்­துக்கள் சார்ந்­தது. அதற்­காகப் பொரு­ளா­தாரம் சார்ந்­த­தில்லை என்று கூற­வ­ர­வில்லை. ஆனால் மலை­யகத் தமிழ் மக்­களின் குறைகள் பெரும்­பாலும் பொரு­ளா­தா­ரமே சார்ந்­தது. வட­கி­ழக்கு மாகாண மக்­களின் உரிமைகள் கோரி பய­ணிப்­பது ஒரு பாதை. 

மலை­யக மக்­களின் பொரு­ளா­தார விருத்தி நோக்கிப் பய­ணிப்­பது பிறி­தொரு பாதை. ஆகவே மலை­யக மக்கள் மீது எமக்குக் கரி­சனை இல்லை என்று கூற­மு­டி­யாது. தேவை ஏற்­படும் போது எமது கருத்துக்­களை இது போல் பகிர்ந்து கொள்வோம். மலை­யகத் தொழி­லா­ளர்கள் சார்பில் குரல் கொடுக்க நாம் தயா­ராக உள்ளோம். 

ஆனால் குரல் கொடுத்தால் மலை­யகக் கட்சித் தலை­வர்­களும் தொழிற் சங்கத் தலை­வர்­களும் கூறு­வார்கள் உமக்கேன் இவ்­வ­ளவு கரி­சனை? என்று. விக்­னேஸ்­வரன் மலை­யகத் தமிழ் மக்­களின் விடயங்­களில் அநா­வ­சி­ய­மாக உள்­ளி­டு­கின்றார். அவர் மலையகத்தில் தமது கட்­சியைப் பிர­பல்­யப்­ப­டுத்­தப்­பார்க்­கின்றாரோ என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பு­வார்கள். 

இத­னால்தான் நாங்கள் எங்கள் கருத்­துக்­களை வெளியி­டாது அவர்கள் மீது அனு­தா­பத்­துடன் பய­ணிக்­கின்றோம். 

ஒரு சில விட­யங்­களை நான் இங்கு குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது. வருங்­கா­லத்தில் தோட்டத் தமிழ்த் தொழி­லா­ளர்கள் தொடர்ந்து கொழுந்து பறிப்­பார்கள் என்று எதிர்­பார்ப்­பது மடத்­த­ன­மா­னது என்று நான் கரு­து­கின்றேன். இளைய தலை­மு­றை­யினர் படித்து முன்­னேறத் தலைப்­பட்­டுள்­ளனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் தற்­போ­தைய சம்­பளம் மற்­ற­வர்­களை ஈர்க்­கா­தது அவர்கள் வேறு தொழில்­களை நாடிச் செல்ல ஒரு காரணம் எனலாம். சொகுசு வாழ்க்­கையை எமது இளம் சந்­த­தி­யினர் நாடு­வது மற்­றொரு காரணம் எனலாம். தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருந்து வருவது எத்தகைய எதிர்காலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அத்துடன் தற்போது தோட்ட நிர்வாகத்தினர் நீண்டகாலத் திட்டங்களுக்கு அமைய நடக்காது கிடைத்ததைச் சுருட்டிக்கொள்ளத் தலைப்படுகின்றார்கள் என்று கேள்விப்படுகின்றோம். தேயிலைக்குப் பதில் வேறு பயிர்ச்செய்கைகளில் நாட்டம் காட்ட முன்வந்திருப்பதும் தெரிய வருகின்றது. 

தோட்டத் தொழிலாளரின் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நீண்டகால திட்டங்களைத் தீட்டி மக்கள் நலம் கருதி நடந்து கொள்வது அவசியம் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்