(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை மீனவர்கள் பிரச்சணைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் இந்திய மீனவர்களின் கைது தொடரும் என தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர , எதிர்வரும் மே மாதத்தில் இந்தியா சென்று மீனவர்கள் பிரச்சணை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்திய நிதியுதவியின் கீழ் முல்லைத்தீவு மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் படகுகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் .

இந்திய அரசாங்கம் இலங்கைக்கான உதவி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மீனவர்களுக்கு படகுகளை வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் 175 படகுகள் மன்னார் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வடக்கில் மீனவர்கள் நலனசார் விடயங்கள் பல முன்னெடுக்கப்பட உள்ளன. பருத்திதுறையில் பாரிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று குருநகர் மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளிலும் துறைமுகங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காரை நகர் பகுதியில் படகுகள் திருத்தும் நிலையம் ஒன்றையும் அமைக்கவுள்ளோம்.

எனவே கடற்றொழிக்கு உகந்த சூழலை வடக்கில்  கட்டியெழுப்பி வருகின்றோம். இலங்கை இந்திய மீனவர் பிரச்சணைக்கு இன்னும் தீர்வு காணப்பட வில்லை. சுமூகமான தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். அது வெற்றியடையும் வரை இந்திய மீனவர்களின் கைது நிறுத்தப்பட மாட்டது. 

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது மீனவர்கள் பிரச்சணை கவனத்தில் கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் எதிர் வரும் மே நான் இந்தியா  செல்லவுள்ளேன் என குறிப்பிட்டார்.