கோலிக்கு பந்து வீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி உள்ளது. இன்றைய அரையிறுதியில் அதிரடி வீரர்  கெய்லின் அதிரடியை நிறுத்த டோனியிடம் கைவசம் பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகக் கிண்ண இருபதுக்கு - 20 அரையிறுதிப் போட்டி தொடர்பில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சங்கா மேலும் தெரிவிக்கையில்,

 மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த டோனியிடம் கைவசம் பந்துவீச்சாளர்கள்  உள்ளனர்.

 ஜஸ்ப்ரீத் பும்ரா, இவர் ஓரளவுக்கு நல்ல வேகத்துடன் வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு பாணியை  கொண்டிருப்பதால் இவரது பந்து வீச்சு ஒரு அச்சுறுத்தலே. 

டோனி அஸ்வினை கிறிஸ் கெய்லுக்கு எதிராக ஆரம்பத்தில் பந்து வீச அழைப்பார் என்று நான் நினைக்கிறேன். 

மேலும், கிறிஸ் கெய்ல் இடது கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஷிஷ் நெஹ்ரா, இந்தத் தொடரில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக வீசி வருவதால் இந்திய அணியிடம் போதியளவு பந்து வீச்சாளர்கள்  இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இந்தத் தொடரில் கோலிக்கு எதிராக அனைத்து அணிகளும் பல்வேறு உத்திகளை கையாண்ட போதும் தோல்வியையே அடைந்தன.

அவுஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் கோலிக்கு அவர்கள் கொஞ்சம் நேரான திசையிலேயே பந்து வீசினர். ஆனால் அவர் அதனை மிட்விக்கெட் திசையில் பிளிக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். 

பின்னர் அடுத்த பந்தை கொஞ்சம் தள்ளி அகலப்பந்தாக வீசினர் அதனை கோலி பொயிண் திசையில் பவுண்டரி அடித்தார். 

எனவே விராட் கோலிக்கு பந்து வீசுவது தொடர்பில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

மேலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சு வலுவானதல்ல. ஆனால் விராட் கோலிக்கு எதிராக அவர்களும் ஏதாவது திட்டம் வைத்திருப்பார்கள் என குமார் சங்கக்கார கருத்துத் தெரிவித்துள்ளார்.