இன்றைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிலிருந்தவாறு ஆதரவினை வழங்கிவருகின்ற போதிலும் அரசாங்கத்தினால் நாம் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றோம். அதேபோன்றும் எமது மக்களும் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்துக்கான எமது ஆதரவை நீடிப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நாட்டுக்கு புதிய ஜனாதிபதியையும் புதிய அரசாங்கத்தையும் தெரிவு செய்வதில் எமது மக்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். அப்படியிருந்தும் எமது மக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை. முன்னதாக அமையப்பெற்ற நூறு நாள் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் காட்டப்பட்ட அக்கறை இப்போது காட்டப்படவில்லை.

காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தொழில் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்படாத நிலைமை காணப்பட்டு வருகின்றது. புதிய அரசாங்கத்தின் மீது எமது மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பினைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை எனும் போதும் மனவேதனையாக உள்ளது.

மழை வெள்ளம் அனர்த்தம் காரணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியுள்ளனர். இவ்வாறு அகதியானவர்களில் பாடசாலைகளில் அல்லாது உறவினர்களது வீடுகளில் தங்கியிருப்போருக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிவாரணங்கள் மறுக்கப்படுகின்றன. நிவாரணம் என்பது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூறுவதாயின் தற்போது 20 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் புனர்வாழ்வு நடவடிக்கைக்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்கிறேன்.

நானும் அரசியல்
கைதிதான்

இதேவேளை நானும் ஒரு அரசியல் கைதியாகவே இருந்து வருகிறேன். முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் என்னை கைது செய்ததுடன் என்னுடன் சேர்த்து மேலும் 6 பேரையும் கைது செய்தனர். 

எனினும் நான் தற்போது பிணையில் இருந்தாலும் என்னுடன் கைது செய்யப்பட்ட ஏனைய அறுவரும் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும் பூசாதடுப்பு முகாமில் நால்வர் எந்த வழக்கும் விசாரணையும் இன்றி இருந்து வருகின்றனர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கின்றது.

கிராமசேவை அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்து தருமாறு விடுக்கப்படுகின்ற சிறு சிறு கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நாம் வெளியில் இருந்தவாறு அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகிறோம். எனினும் எமது கோரிக்கைகள் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாததால் அல்லது கவனம் செலுத்தப்படாததால் நாம் ஏமாற்றப்படுவதாகவே உணர்கிறோம். இத்தகைய செயற்பாடுகளால் எமது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிலிருந்து வழங்கி வரும் ஆதரவை நீடிப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படலாம் என்றார்.